நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் பொருட்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிக்க, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் 4-வது மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் வெளியிட்டார். உணவு பாதுகாப்பு சூழலில், போட்டி மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உருவாக்கும் நோக்கத்துடன் 2018-19-ம் ஆண்டில், 5 அம்சங்களை அடிப்படையாக கொண்ட உணவு பாதுகாப்பு குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. குடிமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுகளை வழங்குவதற்கு இந்த குறியீடு உதவி புரியும். 2021-22 ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் வெற்றி பெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சர் பாராட்டுகளை தெரிவித்தார். இந்த ஆண்டு, தரவரிசையின் அடிப்படையில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்திலும், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இரண்டாவது இடத்திலும் உள்ளன. சிறிய மாநிலங்களில் கோவா முதலிடத்திலும், அதனை தொடர்ந்து மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களும் உள்ளன. யூனியன் பிரதேசங்களில் ஜம்மு காஷ்மீர் முதலிடத்திலும், தில்லி இரண்டாம் இடத்திலும், சண்டிகர் மூன்றாம் இடத்திலும் உள்ளன. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்