Lex Cesarea (லெக்ஸ் செசரியா)

Lex Cesarea என்பது ஒரு ரோமன் மொழி வாசகம். அங்கு இது ஒரு சட்டத்தின் பெயர். சீசரிய என்றால் வெட்டுதல், வெட்டி எடுத்தல் என்று பொருள். இதிலிருந்துதான் கத்திரிக்கோலுக்கு scissors என்ற ஆங்கில வார்த்தையும் உருவானது.

Caedere என்ற லத்தீன் வார்த்தைக்கும் வெட்டுதல் என்று பொருள். ஒரு தாய் பிரசவத்தில் இறக்கும் தருவாயில் இருந்தால், அவளுக்கு இயற்கையான முறையில் மகப்பேறு நடக்க வாய்ப்பில்லை எனில்ல் குழந்தை உயிருடன் பிறக்கும், உயிருடன் இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தால், அறுவை சிகிச்சை செய்து அக்குழந்தையை வெளியே எடுக்கலாம் என்பது இந்தச் சட்டத்தின் குறிக்கோள். முற்காலத்தில் ரோமானிய மற்றும் லத்தீன் நாடுகளில் கருவுற்ற தாய் இறந்தால், வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் புதைக்க மாட்டார்களாம். அப்போது வயிற்றைக் கிழித்து, குழந்தையை வெளியே எடுத்த பிறகுதான் புதைப்பார்களாம்.

நமது நாட்டில் கூட சில கிராமப் பகுதிகளில், அவர்களது ஜாதி, மதரீதியாக கருவுற்றதாய் பிரசவத்திற்கு முன்பு இறக்க நேரிட்டால் குழந்தையுடன் புதைக்கமாட்டார்களாம். தாயின் வயிற்றிலிருந்து குழந்தையை எடுத்து, பின்புதான் புதைப்பார்களாம். இது கிராமப்புறங்களில் இன்றும் நடக்கிறது.

கருவுற்ற தாய் இறப்பின் போது அறுவை சிகிச்சை செய்ய தரப்பட்டிருந்த அனுமதி, தாய் உயிருடன் இருக்கும்போதும் செய்யலாம் என்று சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டது. அதுவே ‘சிசேரியன்’ ஆயிற்று.

உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாடு

ஆண்டுக்கு சராசரி 15% பிரசவங்கள் அறுவை சிகிச்சை முறையில் நடைபெறுவது தவிர்க்க முடியாதது. ஏனெனில் இது தாய் மற்றும் சிசுவின் உயிர் காப்பதற்காக செய்யப்பட வேண்டியவை. ஆனால் இந்தியாவில் இது 18 சதவிகிதம் என்பதும், இதில் முக்கால்வாசி நகர்ப்புறங்கில் நடக்கின்றன என்றும் அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறது. அப்படியானால் கிராமப்புறங்களில் ஏன் இது குறைவு? அங்கு தாயும் சேயும் பிரசவ சமயம் இறந்து விடுகிறார்களா? இது ஒரு சிந்திக்க வேண்டிய கேள்வி. இந்த 18% என்ற புள்ளி விவரம் குறைவானதோ என்றும் உலக சுகாதார நிறுவனத்திற்கு புள்ளி விவரம் சரியாக கிடைக்கவில்லையோ என்ற கேள்வியும் பரவலாக பேசப்படுகிறது என்பதுதான் உண்மை. பிரசவத்தின் தன்மை சரியாக பதிவு செய்யப்படவில்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் 5 சதவிகிதம் மட்டும் இருந்த சிசேரியன் அறுவை சிகிச்சை தற்போது 65% ஆக உயர்ந்திருப்பதாகவும், இதில் தாய் அல்லது சேய் உயிர் காக்க கட்டாயத் தேவைக்காக செய்யப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இது கவலையை அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் இயற்கை முறை பிரசவம் அதிகம் நடக்கிறது. அறுவை சிகிச்சை பிரசவம் 10 மடங்கு ஆபத்தானது. இது தாய்மார்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியவில்லையா? தெரிவிக்கப்படவில்லையா?

சிசேரியன் அதிகமாகக் காரணம் என்ன?

பெண்கள் வலியில்லாமல் மகப்பேறு நடக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்.

இதற்குக் கணவர், பெற்றோர், மற்றோர் எல்லோரும் ஆதரவு தருகிறார்கள்.

நல்ல நாள், நட்சத்திரம் நேரம் போன்றவற்றை அதாவது பிறக்காத குழந்தையின் ஜாதகத்தை முன் கூட்டியே தீர்மானித்து மருத்துவர்களை கட்டாயபப்டுத்துகிறார்கள். அவர்களும் இதற்கு ஒத்துழைக்கிறார்கள்.

ஒன்று / இரண்டு குழந்தை மட்டுமே என்பதால் இரண்டாவது பிரவசத்துடன் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிவிட்டது.

சுகப்பிரசவத்தின் போது குழந்தை வெளியே வர சிரமப்பட்டால் தோலை சிறிது கத்தரித்து பிரசவம் ஆனபின்பு அந்த இடத்தை தையல் போட்டு சரி செய்துவிடுவார்கள். இதற்கு Episiotomy என்று பெயர். இது தாய்க்கு சற்று சிரமத்தைத் தரும். வலி இருக்கும். ஒருமுறை இந்த வலியை / சிரமத்தை அனுபவித்த தாய்மார்கள் மறுமுறை இதற்கு சம்மதிப்பதில்லை.

ஏதாவது சிக்கலாகி, பிரசவ நேரம் நீடித்து, தாய்க்கு அல்லது சேய்க்கு உயிரிழப்பு அல்லது பின் விளைவுகள் ஏற்பட்டால் தற்போது உள்ள நுகர்வோர் சட்டம் மருத்துவர்களை அச்சப்படுத்துகின்றன. எனவே வலி வரும் முன்பே தீர்மானித்து குழந்தையை எடுத்துவிடலாம் என்று முடிவு செய்து விடுகின்றனர்.

சிசேரியன் செய்வதால் ஏற்படும் பிரச்னைகள்

எந்த ஒரு அறுவை சிகிச்சையிலும் ஒரு குறிப்பிட்ட ஆபத்து உண்டு. சிசேரியனும் இதற்கு விதிவிலக்கல்ல.

மயக்க மருந்து கொடுப்பதிலும் ஒரு சில குறிப்பிட்ட ஆபத்துக்கள் உள்ளன. சரியான காரணம் தெரியாத எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம்.

தாய்க்கு வயிற்றுப் பகுதியில் குடலிறக்கம் (Incisional Hernia) ஏற்படலாம்.

தாய் குழந்தையை எடுத்து பாலூட்ட, கொஞ்ச, முதல் 2-3 நாட்கள் முடிவதில்லை. சிசேரியன் செய்து குழந்தை பிறந்தாலும் 4 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரவேண்டும் என்று குழந்தை மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் இது செயல்முறையில் சாத்தியப்படுவதில்லை. குழந்தைக்கு முதல் உணவு தாய்ப்பால். முதல் உணர்வு தாயின் தொடு உணர்ச்சி! இது கிடைக்காத குழந்தைக்கு தாய் சேய் பாசப் பிணைப்பு தாமதமாகும். இந்தத் தாமதம் குழந்தையின் ஆரம்பகால மனவளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிறது.

ஜாதகம், ஜோசியம் என்பனவற்றை நம்புகிறோமோ இல்லையோ என்பது ஒரு தனி மனிதனின் கருத்து. ஆனால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் ஜாதகம் சரியாக இருக்காது

குழந்தை பிறக்கும் முன் அது ஆணா பெண்ணா என்று ஸ்கேன் மூலம் தெரிவிக்கக்கூடாது என்று மருத்துவர்களுக்கும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் சட்டம் இருக்கிறது (PNDT ACT 2002). அதையும் மீறி பெரும்பாலானவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். இதை தடுக்கவே மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு இருக்கிறது. தெரிந்து கொண்டால் சட்டரீதியாக தண்டனையும் உண்டு. இத்தனை விதி முறைகளையும் மீறி குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்கிறார்கள்.

ஆண் என்றால் இந்த நாள், இந்த நட்சத்திரம், இத்தனை மணிக்கு மகப்பேறு என்று செயற்கை ஜாதகம் தயாரிக்கிறார்கள். ஜாதகம் மற்றும் ஜோசியத்திற்குப் புகழ் பெற்ற கேரள மாநில ஜோசியர்கள் சொல்வது என்ன தெரியுமா? இயற்கை முறையில் பிரசவ சமயத்தில் தாயின் பிறப்பு உறுப்பில், ‘உச்சி காணுதல்’ நேரம் தான், பிறந்த என்கிறார்கள். அதன்படி குறித்த ஜாதகம் தான் சரியானது. அறுவை சிகிச்சை செய்த நேரம் கூட சரியான ஜாதகத்தை தீர்மானிக்காதாம். ஜாதகத்தில் சொன்னவை மாறி நடப்பதற்கு இது ஒரு காரணம் என்கின்றனர். இது உண்மையானால் எதற்கு தாயின் உயிரையும், குழந்தையின் உயிரையும், பிற்கால நல்வாழ்வை பணயம் வைத்து பிறக்கும் நேரத்தை நாம் தீர்மானிக்க வேண்டும்? நல்ல நாள் இல்லை, இன்று பிரசவம் நடந்தால் மாமனுக்கு ஆகாது, தாத்தாவுக்கு ஆகாது என்று இடுப்பு வலியுடன் இருக்கும் பெண்ணை வலியைப் பொறுத்துக் கொள் என்று கூறித் தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து தாய் குழந்தை மரணம் எய்திய நிகழ்வுகளும், குழந்தைக்கு மூச்சுத் திணறி, மூளை வளர்ச்சி குன்றிய கதைகளும் உண்டு.

மகப்பேறு ஒரு அருமையான இயற்கை நிகழ்வு! குழந்தைக்குத் தாயின் தொடு உணர்ச்சிதான் முதலில் கிடைக்க வேண்டும் என்பதால் குழந்தை வெளியில் வந்தவுடன் தொப்புள் கொடியை கத்தரிக்கும் முன்பு குழந்தையை தாயின் அடி வயிற்றில் போட வேண்டும்

பலன்கள்

தாயின் கருப்பை எளிதில் சுருங்குகிறது.

சீம்பால் சுரக்கிறது

தாயின் பெருமிதம் (self esteem)

தாய் சேய் பாசப்பிணைப்பு தொடர்கிறது.

குழந்தைக்குப் பாதுகாப்பு உணர்வு சீக்கிரம் கிடைக்கிறது.

இயற்கை மகப்பேற்றினை வலியுறுத்திவருகிறார்கள். பிரசவ வலியை பெண்மையின் தனித்துவம் என்று வலியுறுத்தி விளம்பரப்படுத்துகிறார்கள். வலியைக் குறைக்க எளிய முறைகளைக் கடைபிடிக்கிறார்கள். பிரசவ அறையில் கணவன், நெருங்கிய தோழி, உறவினர் என்று யாராவது உதவிக்கு இருக்கலாம் என்று சொல்கின்றனர். இது நமது நாட்டு அரசு மருத்துவமனைகளில் ‘Birth Companion’ என்று ஒருவர் அனுமதிக்கப்படுகிறார்.

வெளிநாடுகளில் கருவுற்ற காலம் தொடங்கி மகப்பேறு வரை, சுகப்பிரசவத்தை மேற்கொள்ள வேண்டிய ஆலோசனைத் தருகிறார்கள். அறுவை சிகிச்சை மற்றும் ஆயுதமுறை மகப்பேற்றில் உள்ள ஆபத்துகளை விளக்குகிறார்கள். நமது நாட்டிலும் அது தேவைதான்.

தாய்மை என்பது இயற்கையின் அதிசயம்! இதனை மனத்தளவில் பெருமையாக ஏற்று மகப்பேற்றையும் இயற்கையான முறையில் உணர்ந்த பிறகு ஒவ்வொரு நொடியையும் வலி வேதனை இன்றி குழந்தையுடன் இருந்து அனுபவித்து, தாய்மையின் பூரணத்துவத்தை ஒவ்வொரு பெண்மணியும் பெற வேண்டும்.

ஆதாரம் : டாக்டர். என். கங்கா