மூலம்

வெளியே சொல்ல தயக்கம் காட்டும் நோய்களில் மூல நோயும் ஒன்று. இதன் தாக்கம் பரவலாக காணப்படுகிறது. வழக்கம் போல் உணவு பழக்கம் மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதே இந்நோய் ஏற்பட காரணமாகிறது. நோய் முற்றிய நிலையில் மலம் கழிக்கும் போது ரத்தம் வெளியேறுவதுடன் கடுமையான வலியும் இருக்கும். இதற்கு ஆயுர்வேத மருத்துவத்தில் எளிதான சிகிச்சை முறைகள் உள்ளன.

ஆசன வாயில் தசை, ரத்த நாளங்களில் ஏற்படும் விரிசல் காரணமாக முளை வருதல் போன்ற தோற்றமும், அதனால் வலி மற்றும் ரத்த கசிவும் ஏற்படுகிறது. மூலத்தை கெமராய்ஸ் எனவும் கூறுகின்றனர். இது பெரிதாகி உராயும் போது நோயின் தாக்கம் தெரியவரும். இந்தியாவில் 50 சதவீத மக்கள் 50 வயதிற்கு முன்னர் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

காரணம்

ரத்த குழாய்களில் அதிக ரத்தம் தேங்கி விரிவடைந்து ஆசனவாயில் உள்ள தசைகளை விரிவடைய செய்வதால் இந்நோய் ஏற்படுகிறது. வேகமாக முக்கலுடன் மலத்தை வெளியில் தள்ளும் போது ரத்தநாளங்களில் மாற்றம் ஏற்படுகிறது. அதிக உடல் பருமன், பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவது, நிற்பது போன்றவையும் காரணம். மலச்சிக்கல், அதிகப்படியான வயிற்றுபோக்கு உள்ளவர்கள் மற்றும் அதிக எடையை தூக்குபவர்களுக்கு ஏற்படலாம். நார்ச்சத்து குறைவான உணவு உட்கொள்வதும், பொரித்த உணவுகளை உண்பதும், மதுபானம், அதிகளவு மாமிசம், துரித வகை உணவுகளை உண்பதும் காரணம். பரம்பரை காரணம் மற்றும் கர்ப்பகாலத்திலும் ஏற்படலாம். கல்லீரலில் ஏற்படும் அலர்ச்சி மற்றும் ஆசன வாயில் வழக்கத்திற்கு மாறாக கட்டி வளர்வதும் காரணம்.

விதங்கள்

உள் மூலம்: ஆசன வாயின்உள் 2 முதல் 4 செ.மீ நீளம் உள்ள தசை வளர்ச்சியே உள் மூலம் ஆகும். இது 4 வகைப்படும்.

முதல் வகை மலம் கழிக்கும் போது வெளியே வராது. பார்க்கவும் முடியாது.

2 ம் வகை மலம் கழிக்கும் போது மூலம் வெளியில் வரும். பின் தானாக உள்ளே சென்றுவிடும்.

3 வது வகை மலம் கழிக்கும் போது வெளியில் வரும் பின்னர் தானாக உள்ளே செல்லாது.

4 வதுவகை எப்போதும் வெளியில் இருக்கும்.

வெளிமூலம்

ஆசனவாயின் வெளியில் சிறிய தசை போன்ற அமைப்பு இருக்கும். இது வெளி மூலம் ஆகும்.

ரத்த மூலம்

எப்போதும் புதிய ரத்த கசிவு இருந்து கொண்டே இருக்கும். சில சமயம் ஆசன வாய் வெடிப்பாலும் ரத்தம் கசிகிறது. இதனை மூலத்துடன் ஒப்பிடகூடாது. இது மூலம் அல்ல.

அறிகுறி

சிவப்பான சுத்த ரத்தம் ஆசன வாயில் இருந்து வந்து மலத்தில் ரத்தம் காணப்படும். மலம் கழிக்கும் போது தாங்க முடியாதவலி இருக்கும். ஆசனவாயில் கட்டி மற்றும் வீக்கம் இருக்கும். அரிப்பு இருக்கும்.

கண்டறிவது எப்படி

புரோட்டோஸ்கோபி (proctoscopy) மூலம் ஆசன வாய்பிளவு மற்றும் உள்மூலத்தை பார்க்கலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை கண்டறிந்து ரத்தேசாகை ஏற்பட்டுள்ளதா என அறிந்து ரத்த மூலம் உள்ளதா என அறியலாம்.

நவீன சிகிச்சை முறை

என் எஸ் ஏ ஐ டி வகை மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூலத்தினுள் மருந்து (liquidsolution injectto the blood vessel tosbrendthe bile mass) அடைத்து சுருங்க செய்தல். அறுவை சிகிச்சை மூலம் அகற்றுதல். சூடான கருவி மூலம் மூல முளையை கருகச் செய்தல். ரப்பர் போன்ற நூலால் மூல முளையை இறுகக் கட்டி ரத்த தொடர்வை நிறுத்தி அகற்றுதல்.

தடுக்கும் முறை

சிறிய மூல முளை சில நாட்களில் சரியாகி விடும். எனவே தொடர்ந்து சூடான உப்பு நீரில் கழுவ வேண்டும். உள் ஆடைகளை இறுக்கமாக போடக் கூடாது. மலத்தினை அடக்ககூடாது. வேகமாக முக்கலுடன் தள்ளக்கூடாது.

அறுவை சிகிச்சை விளைவுகள்

அறுவை சிகிச்சைக்கு பின்னர் மலம் கழிக்க சிரமம் ஏற்படலாம். சிறுநீர் பாதையில் நோய் தொற்ற வாய்ப்பும் உண்டு.

கடை பிடிக்க வேண்டிய முறைகள்

அதிகமான தண்ணீர், நார்ச்சத்துள்ள உணவுகள் எடுக்க வேண்டும். அதிக காரம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். டப்பாத் எனப்படும் இடுப்பிற்கு கீழ்பகுதியை வெதுவெதுப்பான நீரில் 20 நிமிடம் வைத்து இருப்பது. செரிமானத்திற்கு கஷ்டமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மூலிகை சிகிச்சை

தாககேசரம், திப்பிலி, நிலவேம்பு, காட்டாமணக்கு, நல்ல மிளகு, சூரணகந்தம் (சேனைக்கிழங்கு) திரு பெல்லா, இசப்கால், சுண்டக்காய் ஆகியன சிறந்த மூலிகை மருந்து ஆகும். கொடுவேலி ரத்த மூலத்திற்கு சிறந்தது. 2 ம் வகை முதல் 4ம் வகை வரை மருந்து உட்கொள்வதன் மூலம் பெரிய மாற்றங்கள் வராது. ஷார சூத்திரம் (காரநூலினை பயன்படுத்தி கட்டுதல்) மற்றும் அக்கினி கர்மம் முறையில் சூட்டு கோல் மூலம் அகற்றுதல். குகுலு மற்றும் நல்லெண்ணையை மூலத்தில் தடவி சிகிச்சை அளித்தல்.

உணவு முறைகள்

சேனைக்கிழங்கு அதிகளவில் சேர்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு, ஓட்ஸ், கோதுமை, பேரிக்காய், தவிடு, கேரட் போன்றவை 25 முதல் 30 கிராம் வரை சாப்பிட வேண்டும். 6 முதல் 7 தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். இஞ்சி, புதினா, நார்த்தை, எலுமிச்சையுடன் தேன் சேர்த்து அருந்தலாம். பப்பாளி, மாக்கொண்டை, எள், பாவைக்காய், முள்ளங்கி, உள்ளி (சின்ன வெங்காயம்) உணவில் அதிகம் சேர்க்கலாம். கொத்தமல்லி நீர் அருந்தலாம்.

வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடலாம். மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டு வைத்தியம் மோருடன் சிறிது இந்துப்பு சேர்த்து சாப்பிடலாம். வெங்காயசாற்றுடன் சீனி கலந்து சாப்பிடலாம். ஆப்பசோடாவை வெளி மூலத்தில் வைக்கலாம். மோருடன் வேப்பம் இலை பிழிந்து தேன் கலந்து சாப்பிடலாம். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம், ஒரு டீஸ்பூன் வெந்தயம் அரை கப் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். மோருடன் ஒரு டீஸ்பூன் ஓமத்தை சிறிது உப்பு கலந்து சாப்பிடலாம்.

ஆதாரம்: மைலாடி ஆயுர்வேத மருத்துவமனை