மஞ்சள் காமாலை தாக்குதல்

உயிரை கொல்லக்கூடிய மிக ஆபத்தான நோய்களில் ஒன்று தான் மஞ்சள் காமாலை. எனவே சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

வயதான ரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் (Spleen) அழிக்கப்படும் போது பிலிரூபின் (Spleen) என்ற நிறப்பொருள் உடலில் உற்பத்தி ஆகிறது.

இந்த பிலிரூபின் மலம், சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.

கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது.

மது அருந்துவதாலும், ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலை தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

வைரஸ் A மற்றும் E கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலை, அசுத்தமான நீரையும், ஈ மொய்த்த தின்பண்டங்களை உட்கொள்வதாலும் பரவுகிறது.

சாக்கடை நீர் கலந்த குடிநீர் மற்றும் அசுத்தமான நீரை குடிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படும்.

வைரஸ் B,C,D மற்றும் `G’ வகை கிருமிகள் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது, அதாவது பலமுறை பலருக்கு பயன்படுத்திய ஊசியை உபயோகப்படுத்தும் போது பரவுகிறது.

அறிகுறிகள்

வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், ரத்தக்கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும்.

கண்ணின் வெள்ளைப் படலத்திலும், நாக்கின் அடிப் பகுதியிலும் மஞ்சளாக இருக்கும்.

சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் போகும். மேலும் சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் ஏற்படும்.

கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க்கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிகிச்சை முறைகள்

ரத்தப் பரிசோதனையின் மூலம் மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும்.

இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறியலாம்.

ரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மூலம் பித்தக்குழாயில் உள்ள கட்டிகள், கற்கள் போன்றவற்றை துல்லியமாக கண்டறியலாம்.

நோய் இருப்பது உறுதியான பின்னர், உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம்.

கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உள்ளது. மேலும் கல்லீரல் செயலழிந்து விடும் அபாயமும் உள்ளது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

காரமான மசாலா உணவுகளை வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

மஞ்சள் காமாலை வந்து ஐந்து மாதங்கள் வரை அசைவ உணவுகள் எடுக்கக் கூடாது.

முட்டையில் மஞ்சள் கரு, அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சுகாதாரமற்ற இடங்களில் விற்கும் குளிர்பானம், உணவு வகைகளை உண்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் சாப்பிடுவது மிக முக்கியம்.

பாதுகாப்பு முறைகள்

மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்தவேண்டும்.

நோய் தொற்றை தவிர்க்க சுற்றுப்புறத்தை மிக தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

சுகாதாரமான கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும், ஈக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கல்லீரல் பாதிப்பு நோய் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும்

ஆதாரம்: தமிழ்செய்தி நாளிதழ்