நீரிழிவானது பல்வேறு உறுப்புகளையும் பாதிக்கிறது. நீரிழிவினால் சிறுநீரகம் பாதிப்படைவதை பலரும் அறிவார்கள். அதேபோல தங்கள் பார்வைத் திறனையும் மோசமாகப் பாதிக்கக் கூடியது என்பதைப் பெரும்பாலானோர் உணர்ந்து கொள்ளவதில்லை. நீரிழிவு நோயால் பார்வை பல்வேறு வழிகளில் பாதிப்புறலாம். நீரிழிவினால் விழித்திரைப் பாதிப்பு கண்களின் விழித்திரையில் (Retina) ஏற்படும் பாதிப்பு மிக முக்கியமானது. விழித்திரையானது Rod and cones ஆகிய கலங்களால் நிறைந்திருக்கிறது. நாம் பார்க்கும் போது எமது விழித்திரையில் ஒளியாக விழும் பிம்பத்தை மின்அதிர்வுகளாக மாற்றி, பார்வை நரம்பு (Optic Nerve) ஊடாக மூளைக்கு அனுப்பும் பணியை இவை செய்கின்றன. உடவிலுள்ள எல்லாக் கலங்களும் போலவே விழித்திரைக் கலங்களுக்கும் ஒட்சிசனும் போசனைப் பொருட்களும் தேவை. இவை இரத்தக் குழாய்கள் ஊடாக வரும் இரத்தத்திலிருந்தே கிடைக்கிறது. நீரிழிவு நோயானது இரத்தக் குழாய்களைப் பாதிப்பதை அறிவீர்கள். அதுபோலவே விழித்திரைக் குருதிக் குழாய்களையும் பாதிக்கும். நீரிழிவு நோயுள்ள எவருக்கும் விழித்திரைப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இருந்தபோதும் நீண்ட காலமாக நீரிழிவு உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். பாதிப்புகள் பாதிப்புற்ற விழித்திரை இரத்தக் குழாய்களிருந்து இரத்தம் கசியலாம்.. இது கண்ணின் நடுப் பகுதிக்குள் பொசிந்து வந்து பார்வையைத் தெளிவற்றதாக்கும். இரத்தம் போலவே திரவக் கசிவும் ஏற்படுவதுண்டு. இது பொதுவாக மக்கியுலா என்ற பகுதியில் சேர்ந்து அதை வீங்கச் செய்யும். இதை macula edema என்பார்கள். கூரிய பார்வைக்கு அவசியமான மக்கியுலாவில் இவ்வாறு வீக்கம் ஏற்பட்டால் பார்வை மங்கும். நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்டரோலால் இரத்தக் குழாய்கள் அடைபடலாம். அடைபட்டவற்றை ஈடுசெய்வதற்காக புதிய இரத்தக் குழாய்கள் வளரும். இதுவும் பார்வைப் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு நடப்பதை Proliferative retinopathy என்பார்கள். அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் நீரிழிவு விழித்திரை நோயானது எந்த ஒரு அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. வலியோ வேதனையோ பார்வைக் குறைபாடோ நோயாளிக்கு இருக்காது. ஆயினும் நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது பார்வை சற்று மங்கலாகும். இரத்தக் கசிவு ஏற்படும்போது கரும்புள்ளிகள் பார்வையில் தோன்றலாம். அவை தானகவே மறையவும் கூடும். ஆயினும் மீண்டும் வரும். கடுமையாக குருதிக் கசிவு இருந்தால் பார்வையில் பெரும் பகுதி படத்தில் காட்டியபடி கருமை படர்ந்து மூடக் கூடும். எனவேதான் நீரிழிவு நோயுள்ளவர்கள் அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது வருடம் ஒருமுறையாவது கண் மருத்துவரைக் காண்பது அவசியம். சிகிச்சை சிகிச்சையைப் பொறுத்தவரையில் நீரிழிவை பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே மிக முக்கியமானது. நீரிழிவை கண்காணிக்கும் தனது மருத்துவரை 1 முதல் 3 மாதத்திற்கு ஒரு முறையும், கண் மருத்துவரை வருடம் ஒருமுறையாவது கலந்து ஆலோசிக்க வேண்டும். நோயின் தாக்கம் அதிகமாகும்போது லேசர் சிகிச்சை அளிப்பார்கள். இரத்தம் அதிகம் கண்ணினுள் கசித்திருந்தால் அங்குள்ள இரத்தம் கலந்த திரவத்தை அகற்றிவிட்டு வேறு உப்புத் திரவத்தை மாற்றீடு செய்வதுண்டு. இதனை vitrectomy என்பார்கள். நீரிழிவால் வேறு கண் பாதிப்புகள் கற்றரக்ட் கற்றரக்ட் என்பது கண்வில்லை வெண்மையடைந்து பார்வையைக் கெடுப்பதாகும். வெண்புரை நோய் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வெண்புரை நோயானது வயதாகும் காலத்தில் எவருக்கும் வரக் கூடிய ஒன்றே. இருந்தபோதும் நீரிழிவு நோயாளர்களுக்கு குறைந்த வயதிலேயே வந்து பார்வையை மறைக்கும் குளுக்கோமா குளுககோமா என்பது கண்ணின் உட்புறம் உள்ள அழுத்தம் (pressure) அதிகரித்து அதனால் பார்வை நரம்பு பாதிப்புறுவதாகும். இதுவும் யாருக்கும் ஏற்படக் கூடுமாயினும் நீரிழிவு உள்ளவர்களை ஏனையவர்களை விட இரு மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது என்பது குறிப்படத்தக்கது இந்த நோய்கள் எல்லாம் ஒருவருக்கு வந்தால் கண் பார்வையை முழமையாகப் பழைய நிலைக்குக் குணமாக்குவது சிரமம். பெரும்பாலும் பார்வை மேலும் மோசமடைவதைத் தடுப்பதாகவே இருக்கும். எனவே கண்மருத்துவரைச் சந்தித்து கண் பரிசோதனை செய்வது அவசியமாகும். ஆதாரம்: முருகானந்தன் கிளினிக்