கோடைகாலத்தில் சாலையோரத்தில் சரம் சரமாக பூத்து குலுங்குவது சரக்கொன்றை மரம். பல்வேறு நன்மைகளை கொண்ட இது, நோய்களை விரட்டும் மூலிகையாக விளங்குகிறது. இதன் காய்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

சரக் கொன்றை மரத்தின் இலை, பட்டை ஆகியவை மருந்தாகிறது.

படர்தாமரைக்கான மேல்பூச்சு மருந்து

இலையை பசையாக அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். படர்தாமரை உள்ள இடத்தில் இதை பூசும்போது குணமாகும்.

சரக்கொன்றையின் இலை, பூ ஆகியவை மருத்துவ குணங்களை கொண்டது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.

வயிற்றை சுத்தப்படுத்தும் மருந்து

நெல்லிக்காய் அளவுக்கு சரக்கொன்றை புளியை எடுத்துக் கொள்ளவும். இதனுடன், அரை ஸ்பூன் திரிபலா சூரணம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடிக்கும்போது, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி வயிற்றை சுத்தம் செய்யும்.

அதிக வயிற்றுபோக்கு இருக்கும்போது மோரில் உப்பு போட்டு குடித்தால் சரியாகும். வயிறு சுத்தமாவதால் மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

வெள்ளைப்போக்கு, காமாலைக்கான மருந்து

10 சரக்கொன்றை பூக்கள், துளிர் இலைகளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடித்துவர வெள்ளைபோக்கு, காமாலை சரியாகும்.

சரக்கொன்றை அற்புதமான மருந்தாகிறது. மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக விளங்குகிறது.

இதன் பூக்கள், இலைகளை தேனீராக்கி குடிப்பதன் மூலம் நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோயை தடுக்கிறது. கொழுப்புசத்தை நீக்குகிறது. காய்ச்சல், சளிக்கு மருந்தாகிறது

மலச்சிக்கலுக்கான மருந்து

சரக்கொன்றை பூக்களின் மென்மையான இதழ்களை மட்டும் தனியாக எடுக்கவும். இதனுடன் தேன் சேர்த்து இதழ்களை நன்றாக ஊற வைக்கவும்.

இதன்மீது ஒரு மெல்லிய துணி கட்டி 4 நாட்கள் வரை வெயிலில் காயவைக்கவும். பின்னர் இதை நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும்.

ஆதாரம்: தினகரன் நாளிதழ்