கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

தாளிக்கும் போது சேர்க்கப்படும் ஓர் பொருள் தான் கறிவேப்பிலை. இந்த கறிவேப்பிலையை பலரும் சாப்பிடும் போது தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் கறிவேப்பிலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

கறிவேப்பிலையைக் கொண்டு நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதிலும் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க, மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை கறிவேப்பிலையைக் கொண்டு சரிசெய்லாம்.

இங்கு உடலில் ஏற்படும் பிரச்சனைகளைக் குணப்படுத்த கறிவேப்பிலையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இரத்த சோகை

நாள்பட்ட இரத்த சோகை கொண்டவர்கள், உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து சுடுநீர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து பருகி வர, விரைவில் சரியாகும்.

கண்புரை

வயதான காலத்தில் கறிவேப்பிலையை சாறு எடுத்து, அந்த சாற்றினைப் பருகி வந்தால், அது பார்வை கோளாறுகளைத் தடுப்பதோடு, முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கலால் பல நாட்களாக அவஸ்தைப்பட்டு வருகிறீர்களா? அப்படியெனில் 4-5 நாட்கள் சிறிது கறிவேப்பிலையை வெயில் நிழலில் உலர்த்தி, பொடி செய்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியுடன், தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்

வயிற்றுப்போக்கு

15-20 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால், வயிற்றுப்போக்கு உடனடியாக நின்றுவிடும்.

உடல் பருமன்

உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர வேண்டும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் பருமன் குறைவதோடு, நீரிழிவும் தடுக்கப்படும். முக்கியமாக இம்முறையை 3 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வயிற்றுக்கடுப்பு

வயிற்றுப்போக்குடன் இரத்தம் மற்றும் சளி வெளியேறும் நிலையைத் தான் வயிற்றுக்கடுப்பு என்று சொல்வார்கள். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண, தினமும் 8-10 கறிவேப்பிலை இலைகளை பச்சையாக உட்கொள்ள வேண்டும்.

காலைச் சோர்வு

கர்ப்பிணிகளுக்குத் தான் காலைச் சோர்வு ஏற்படும். இதனைத் தவிர்க்க 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும்.

குமட்டல் மற்றும் வாந்தி

மோருடன் கறிவேப்பிலையை அரைத்து கலந்து குடித்து வர, குமட்டல் மற்றும் வாந்தியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

செரிமான கோளாறு

செரிமான கோளாறுகளால் அவஸ்தைப்படுபவர்கள், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து பருக உடனே செரிமான பிரச்சனைகள் குணமாகும்.

பசியின்மை மற்றும் சுவையின்மை

உங்களுக்கு சரியாக பசி எடுப்பதில்லையா? சுவை எதுவும் தெரியவில்லையா? அப்படியெனில் அதனை சரிசெய்ய, மோரில் கறிவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சேர்த்து, அத்துடன் சீரகப் பொடி, ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து பருக வேண்டும்.

சிறுநீரக பிரச்சனைகள்

கறிவேப்பிலை ஜூஸ் உடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து பருகி வந்தால், சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.

பூச்சிக்கடி

பூச்சிக்கடியைக் குணப்படுத்த கறிவேப்பிலை மரத்தில் உள்ள பழங்களை அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ விரைவில் சரியாகும்.

ஆதாரம்: ஒன்இந்திய நாளிதழ்