முதலுதவி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

முதலுதவியாளர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.

சுற்றுச் சூழலை அவதானித்துப் பாதுக்காப்பை உறுத்திப்படுத்தல்.

நோயாளருக்கு உதவியளித்தல்.

தீ விபத்துக்கான முதலுதவிகள்

விபத்து நடந்த இடத்தில் யாருக்காவது தீ பிடித்துக்கொண்டால், முடிந்தவரை தண்ணீர் ஊற்றி அணையுங்கள். சாக்குப்பையை சுற்றுவதெல்லாம் மிக மிக கொடூரமான தியணைக்கும் முறை. பொருட்களுக்கு தீப்பிடித்துக்கொண்டால் அதை அணைக்க சாக்குப்பையைப் பயன்படுத்தலாம். ஆனால் மனிதன் மீது தீப்பிடிக்கும்போது தண்ணீரே சிறந்த மருந்து. தவறிப்போயும். மணலையெல்லாம் போட்டு அனைக்க முயன்று விடாதீர்கள். அது நாமே அவரை கொலை செய்வது போல ஆகும்.

ஒரு வேளை தீ தானே அணைந்துவிட்டாலும் , எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர் மீது தண்ணீரை ஊற்றுங்கள் . காரணம் வெந்த புண்ணிற்கு குளிர்ச்சி அப்போது மிக அவசியம். அப்போது நாம் ஊற்றாமல் போகும் தண்ணீர் அவரின் உயிரை எடுத்து விடலாம்

வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு

வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.

முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம்.

ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.

உடல்சூடு சாதரணமான நிலைக்கு வந்தவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்ந்திருக்கச் செய்யவும்.

உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.

மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

அடிப்படை முதலுதவிக் குறிப்புகள்

முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.

முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.

அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.

பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.

முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்

அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை அளிக்க வேண்டும்

பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.

பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயிர் காக்கும் முதலுதவி

CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration மற்றும் Chest compressions அடங்கிய CPR-Cardio Pulmonary Resuscitation எனப்படும் உதவி மிக அவசியம்.

ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம்

இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது

இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது

உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது

விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது >தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது அதிர்ச்சியின் போது ( in a state of shock)

வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது

மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock)

இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால்) CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.

ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல்உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்)

இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்)

நினைவிருக்கிறதா என உறுதி செய்தல்

சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion), மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல்

உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது. சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது.

இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை

அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது; (தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்) ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது. இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும். CPR ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு. அதாவது A=Airway B=Breathing C=Circulation முதலில்-Airway சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம். நினைவிழந்த நபரை சரிசமமான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். இதனால் சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாவு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும். பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்). இரண்டாவதாக-Breathing சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊத/உள்செலுத்த வேண்டும்.

மூன்றாவதாக circulation - ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழந்து அதினிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம். நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.

Chest Compressions எப்படி அளிப்பது?

விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும். 1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது. இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.

ஆதாரம் : டாக்டர். செந்தில் வசந்த்