குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் இருந்தால் அடுத்து வரும் தலைமுறையில் புற்றுநோயின் தாக்கம் கட்டாயம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதேநேரம் புற்றுநோய் ஏற்பட மரபு மட்டுமே காரணம் இல்லை. சுற்றுச்சூழலின் பங்கு 60% இருக்கிறது.

எதனால் வருகிறது புற்றுநோய்?

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய்தான் அதிக அளவில் இருக்கிறது. இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலோர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றனர். சிகரெட், பீடி, பான்பராக், புகையிலை போன்ற பழக்கங்களால் வாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கலாம்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்தும் மக்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம். உணவுப் பழக்கத்துக்கும் புற்றுநோய்க்கும் இருக்கும் தொடர்பும் முக்கியமானது.

போதுமான உடற்பயிற்சியின்மை, சமச்சீரற்ற உணவுப் பழக்கம் ஆகியவையும் புற்றுநோய் வருவதற்கான காரணங்களாக அமையலாம். தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்து, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்லது. சுகவீனமான உடம்பு, நோய்கள் தங்கும் கூடாரமாகிவிடும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் நோய்களின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியும்.

ஆரம்ப அறிகுறிகள்

உடலில் எந்த இடத்தில் கட்டி வந்தாலும் அவற்றை உடனே கவனித்துவிட வேண்டும். வலி இல்லை என்ற அலட்சியம் ஆபத்து. காரணம் புற்றுநோய்க் கட்டிகள் பெரும்பாலும் வலியில்லாத கட்டிகளாகவே இருக்கும். சில நாட்களில் குணமாகாத கட்டியோ, வீக்கமோ இருந்தால், மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை பெற வேண்டும். பெண்களுக்கு மார்பகத்தில் வலியில்லாத அல்லது வலியுடன் கூடிய கட்டி தோன்றினால் உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும். காரணம் பெண்களை மார்பகப் புற்றுநோயும், கர்ப்பவாய் புற்றுநோயும்தான் அதிகளவில் தாக்குகின்றன. திடீர் எடை குறைவும் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டும். சிலர் அதற்குத் தாங்களாகவே ஏதாவது காரணம் கற்பித்துக் கொள்வார்கள். இது தவறு. நன்றாகச் சாப்பிட்டும் உடல் எடை தொடர்ந்து குறைகிற மாதிரி இருந்தால், அதை மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை பெறவேண்டும்.

உடலின் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதலும் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் ஒன்று. வாய் அல்லது மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், அடிபட்ட இடத்தில் இருந்து அதிக ரத்தப்போக்கு, மலம் கழிக்கும்போது ரத்தம் வடிவது ஆகியவையும் கவனிக்க வேண்டிய பிரச்சினைகளே. காலைக் கடனில் ஏற்படும் திடீர் மாற்றமும் கவனத்தில் கொள்ளவேண்டிய சிக்கல்தான். சிலருக்குத் திடீரென வயிற்றுப்போக்கோ, மலச்சிக்கலோ ஏற்படலாம். இது ஓரிரு நாட்களில் சரியாகாமல் தொடர்ந்தபடி இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மருத்துவ வசதிகள் அதிகரித்திருக்கும் இந்நாளில் புற்றுநோய் குறித்துப் பயப்படத் தேவையில்லை. ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டால் புற்றுநோயைக் குணப்படுத்திவிடலாம். ஆனால் நோயைக் குணப்படுத்துவதைவிட, அது வராமல் தடுப்பது சிறந்தது. சரியான உணவுப்பழக்கம்தான் அதற்குக் கைகொடுக்கும்.

மேலும் விபரங்களுக்கு : *ஹர்ஷமித்ரா – இலவச புற்றுநோய் தகவல் மையம், திருச்சி