டைபாய்டு சாதாரண காய்ச்சலே மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் டைபாய்டு காய்ச்சலாக இருக்கமோ என்ற அச்சம் தொற்றிக் கொள்கிறது. அந்த அளவுக்கு பரவலாக குறிப்பாக சுகாதாரம் குறைவான நாடுகளில் இந்நோய் காணப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் தாக்ககூடியது, சால்மோனெல்லா டைபை(Salmonella typhi) என்னும் பாக்டீரியாவால் இது வருகிறது. அசுத்தமான குடிநீர், உணவு மூலமாக இந்த கிருமிகள் உடலுக்குள் ஊடுருவுகின்றன. முதலில் காய்ச்சல், தலைவலி, உடல்வலியுடன் நோய் தொடங்கும். ஒவ்வொரு நாளும் காய்ச்சல் படிப்படியாக அதிகரிக்கும். அறிகுறிகள் ஒரு மாதத்திற்கு மேலாக காய்ச்சல் நீடிக்கும். மிகவும் சோர்ந்த நிலை, வயிறு வலி, வயிறு உப்புதல். எடை குறைவு, வேகமாக மூச்சுவிடுதல். எலும்பு மூட்டுகளிலும் தலையிலும் கடுமையான வலி, பசியின்மை. குமட்டல், வாந்தி, வயிற்றுவலி. பரிசோதனை WIDAL TEST என்பது டைபாய்டை கண்டுபிடிக்க உதவும் ஆய்வக பரிசோதனை. நோய் தாக்கப்பட்டு 7 நாட்கள் கழித்தே இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால் இது Positive என்று வரும். உணவு முறை காரம் இல்லாத எளிதில் செரிக்க கூடிய உணவை மட்டுமே தரவேண்டும். பட்டினி போடவே கூடாது, வயிற்றில் உணவு இருந்தால் மட்டுமே குடல் புண் சீக்கிரம் ஆறும். நீர் சத்து உடலில் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். சரியாக கண்டுபிடித்து மருந்து சாப்பிட வேண்டும், இருப்பினும் காய்ச்சல் குறைந்த பின் ANTIBIOTIC மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம். புழுங்கல் அரிசி கஞ்சியை வடிகட்டி கஞ்சித் தண்ணீரை மட்டும் சிறிது உப்பு சேர்த்து காலையில் மற்றும் மதிய வேளையில் சாப்பிடுவது நல்லது. நிலவேம்பு, நன்னாரி, சீந்தில், திராட்சை, நெல்லி வற்றல், அதிமதுரம், விளாமிச்சம்வேர் கஷாயம் நல்ல குணம் தரும். தடுப்பு முறைகள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதிலும் கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். குடிநீரை நன்கு கொதிக்கவைத்து ஆறவைத்துக் குடிக்க வேண்டும். காய்கறி மற்றும் பழங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்திய பிறகே சமையலுக்கும் சாப்பிடவும் பயன்படுத்த வேண்டும். சமைத்த உணவுகளை திறந்துவைக்கக் கூடாது. ஈக்கள் மொய்க்காமல் பாதுகாக்க வேண்டும். திறந்தவெளிகளில் ஈக்கள் மொய்க்கும் வகையில் விற்கப்படும் உணவுகளையும் சாப்பிடக் கூடாது. வீடுகளிலும் தெருக்களிலும் சுற்றுப்புறச் சுகாதாரம் காக்கப்பட வேண்டும். கேள்வி பதில்கள் 1. டைபாய்டு காய்ச்சல் எப்போது வரும்? சுற்றுச்சூழல் சீர்கெடுவதால் ஏற்படும் தொற்று நோய்களில் மிக முக்கியமானது டைபாய்டு. மழைக்காலங்களில், தெருக்களில் தேங்கும் மழைநீரில், குப்பை கழிவுகள் சேர்ந்து, நோய் கிருமிகள் வாழ வழிவகுக்கிறது. சிறு குழந்தைகள் முதல், முதியோர் வரை, யாரையும் தாக்கும் தன்மை கொண்டது. 2. இந்நோய் வரக் காரணம்? 'சல்மோனெல்லா டைபி' எனும் பாக்டீரியா கிருமிகள், நம் குடல் திசுக்களைத் தாக்குவதால், இந்த நோய் ஏற்படுகிறது. நோயாளியின் சிறுகுடலிலும், அதை சார்ந்த நிணநீர்த் திசுக்களிலும் இந்தக் கிருமிகள் வாழ்கின்றன. நோயாளியின் மலம் மற்றும் சிறுநீர் மூலம் அவை வெளியேறுகின்றன. 3. நோய் கிருமிகள் எங்கு உற்பத்தியாகின்றன? அசுத்தமான இடங்களிலும், தெருவோர கழிப்பிடங்களிலும் இந்தக் கிருமிகள் பல்லாயிரக்கணக்கில் வாழ்கின்றன. இந்த இடங்களில் வாழும் ஈக்கள் மூலம், வீட்டில் பாதுகாக்கப்படாத குடிநீரிலும், உணவிலும் கிருமிகள் கலந்துவிடுகின்றன. இந்த அசுத்த உணவையும், குடிநீரையும் பயன்படுத்துவோருக்கு, டைபாய்டு காய்ச்சல் ஏற்கிறது. 4. ஏற்கனவே டைபாய்டு வந்து குணமடைந்தோருக்கு இந்நோய் மறுபடியும் தாக்குமா? கண்டிப்பாக! அதுமட்டுமல்ல, ஏற்கனவே டைபாய்டு காய்ச்சல் வந்து குணமானவரின் குடலில், இந்தக் கிருமிகள் குறைந்தது மூன்று மாதங்கள் வரை வசிக்கும். அப்போது, அந்த நபரின் மலத்திலும், சிறுநீரிலும் அவருக்கு தெரியாமலேயே அவை வெளியேறி, அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும். 5. காய்ச்சலின் பாதிப்புகள்? குழந்தைகளைப் பாதிக்கும்போது, 'காய்ச்சல் வலிப்பு' வரலாம். குடலில் ரத்தக்கசிவு ஏற்படலாம். ரத்த வாந்தி உண்டாகலாம். நோயின் துவக்க நிலையில் சிகிச்சை பெறத் தவறினால், ரத்தத்தில் இந்தக் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகரித்து, 'நச்சுக்குருதிநோய்' ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து நேரலாம். ஆதாரம் : தமிழ்செய்தி நாளிதழ்