மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு.

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.

எனவே கல்லீரலில் பிரச்சனை இருந்தால் தென்படும் அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கால்களில் வீக்கம்

ஒருவருக்கு கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், கால்களில் லேசாக வீக்கம் அவ்வப்போது ஏற்படும். எனவே திடீரென்று கால்கள் வீங்கியிருந்தால், உடனே மருத்துவரை சந்திக்கவும்.

மஞ்சள் காமாலை

எப்போது ஒருவரின் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதோ, அத்தகையவருக்கு மஞ்சள் காமாலை காரணமாக பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.

வயிற்று உப்புசம் மற்றும் வலி

கல்லீரலில் கட்டிகளானது அவ்வளவு சீக்கிரம் வராது. ஆனால் கல்லீரலானது தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் தான், கல்லீரலில் கட்டிகள் உருவாகும். உங்கள் கல்லீரலில் கட்டிகள் இருந்தால், வலது பக்கத்தில் அடிவயிற்றிற்கு சற்று மேலே வலி எடுப்பதோடு, வயிறு உப்புசத்துடனும் இருக்கும்.

வாந்தி, சோர்வு, காய்ச்சல்

கல்லீரலை வைரஸ் தாக்கினால் உருவாவது தான் ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் அழற்சி. உங்களுக்கு கல்லீரல் அழற்சி இருந்தால், வாந்தி, சோர்வு, காய்ச்சல், மயக்கம், குளிர் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

தலைச்சுற்றல்

ஆல்கஹால் குடிப்பவராக இருந்தால், விரைவில் கல்லீரல் பாதிக்கப்படும். ஆல்கஹால் அதிகம் பருகி கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் அடிக்கடி ஏற்படும்.

குமட்டல்

கல்லீரல் சரியாக இயங்காமல் இருப்பின், குமட்டலை சந்திக்கக்கூடும். எனவே உங்களுக்கு அவ்வப்போது குமட்டல் ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

அடர் நிற சிறுநீர்

கல்லீரலில் பிரச்சனைகள் இருந்தால், உங்கள் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளிவரும். எனவே இந்த நிலையை நீங்கள் சந்தித்தால், தவறாமல் மருத்துவரை சந்தியுங்கள்.

சோர்வு

நாள்பட்ட சோர்வு கூட கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறியே. ஆகவே உங்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால், மருத்துவரை சந்தித்து முறையான பரிசோதனையை மேற்கொண்டு, சரியான காரணத்தைக் கண்டறியுங்கள்.

ஆதாரம்: http://tamil.boldsky.com