அறிமுகம்

தொண்டை கண்சவ்வுக் காய்ச்சல் கடுமையான மிகவும் பரவக்கூடிய ஓர் ஆடனாவைரல் நோய். காய்ச்சல், தொண்டையழற்சி, கடும் நுண்ணறை கண்சவ்வழற்சி, மற்றும் பகுதி சார் நிணச்சுரப்பி மிகைத் திசுவளர்ச்சியும் மென்மையான வீங்கிய முன்காது நிணநீர்ச்சுரப்பி வியாதியும் இதன் இயல்புகள்.

கண்சவ்வின் மிகப்பரவலான கடும் வைரல் தொற்றுக்கு ஆடனாவைரசுகளே காரணம். இது ஆண்டு முழுவதும் நோயெழுச்சியாகவும் பரவலாகவும் காணப்படும்.

ஆடனோவைரல் கண் தொற்றுக்களாவன:

- தொண்டை கண்சவ்வுக் காய்ச்சல்

- திடீரெழுச்சி வெண்படல அழற்சி

- குறிப்பற்றப் பரவலான நுண்ணறைக் கண்சவ்வழற்சி

- நீடித்தக் காம்புக்கட்டி கண்சவ்வழற்சி

தொண்டை கண்சவ்வுக் காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகளுக்கும் நிறுவனம்சார் மக்களுக்கும் காணப்படுகிறது. குடும்பம், கல்விநிலையங்கள், சிறைகள் அல்லது படை நிறுவனங்களில் நோயெழுச்சி ஏற்படும்.

பொதுவாக இது இரு கண்ணையும் பாதிக்கும். ஒரு கண் பாதிக்கப்பட்டு 1-3 நாட்கள் கழித்து மறுகண் பாதிக்கப்படும். முதல் கண்ணை விட இரண்டாவது கண்ணில் குறைவாகப் பாதிப்பு காணப்படும்.

பெரும்பாலான நிகழ்வுகள் இலேசாகவும் தாமாகவே கட்டுப்படுத்திக் கொள்வனவாகவும் இருக்கும். ஆனால் நீடித்த நேர்வுகளும் பதிவாகியுள்ளன. கண்ணில் நீண்ட கால நோய்த்தாக்கப் பின் விளைவுகள் அரிதாகும்.

நோயறிகுறிகள்

தொண்டை கண்சவ்வுக் காய்ச்சலின் நோய்த்தன்மைகள் வருமாறு:

மண்டலம்சார் அம்சங்கள்:

- திடீர் அல்லது படிப்படியான காய்ச்சல் (100-104°F) 10 நாட்கள் வரை நீடிக்கும்.

- தொண்டை அழற்சி இலேசாக அல்லது அதிக வலியுடன் இருக்கும்.

- சோர்வு

- தசைவலி

- இரைப்பைக் குடல் பாதிப்புகள்

கண் அம்சங்கள்:

- கண்சவ்வழற்சி சிவப்பு

- கண் உறுத்தல்

- கண்ணில் எரிச்சல்

- அரிப்பு

- கண்ணில் நீர் வடிதல்

- கண்சவ்வு வீக்கம்

- கீழ்ப்புறக் கண்சவ்வு இரத்தக் கசிவு.

- இமை வீக்கம்

- இமைகள் வீக்கம் இன்றி சிவப்பு அல்லது நீலமாக மாறுதல்.

- கழுத்து நிணச்சுரப்பிப்புற்று

- வலியுடன் கூடிய முன்காது நிணச்சுரப்பிப்புற்று.

காரணங்கள்

நோய்க்குக் காரணமான ஆடனாவைரசுகள் உருவ ஒற்றுமையுள்ள ஆனால் விளைவியத் தனித்துவம் கொண்ட ஒரு தொகுதி டியாக்சிரிபோநியூக்ளிக் அமில (டி.என்.ஏ) வைரசுகளைக் உள்ளடக்கியுள்ளது. இந்த வைரசுகள் ஒரு பொதுவான நிரப்பிப் பொருத்தும் விளைவியத்தைப் பகிர்ந்து கொள்ளுகின்றன. மிகவும் நிலைத்த தன்மையுள்ள ஆடனோவைரசுகளும், உலகம் முழுவதும் உண்டு. இவை மேல் மூச்சுப் பாதையிலும் கண்ணிலும் தொற்றை ஏற்படுத்துகின்றன.

தொண்டை கண்சவ்வுக் காய்ச்சல் பெரும்பாலும் ஆடனோவைரஸ் ஊனீர் வகை 3 மற்றும் 7-லும் ஏற்படுகிறது. ஆனால் ஊனீர்வகைகள் 2, 4 மற்றும் 14-ம் நோய் ஏற்படுத்துபவையே என்று ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஊனீர் வகை 1,5,6,8,11 மற்றும் 19-தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நோயெழுச்சி ஏற்படலாம்.

பின் வரும் தொடர்புகளால் ஆடனோவைரஸ் பரவுகின்றன:

- தொற்றுள்ள மேல்மூச்சுத் துளிகள் மூலம்

- உயிரற்றப் பொருட்கள் மூலம்.

- நீச்சல் குளம் மூலம்

கிருமி பரவியபின் நோயரும்பும் காலம் 5-12 நாட்கள் (சராசரி 8 நாட்கள்). அறிகுறிகள் தோன்றியபின் தொற்று பரவும் விகிதம் முதல் சில நாட்களில் 100 % ஆகவும் 10-15 நாட்களுக்குப் பின் இல்லாமலும் இருக்கும்.

நோய்கண்டறிதல்

நோய் வெளிப்படும் வரலாற்றையும் நோயின் உடல்சார் அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டே பொதுவாக நோய்கண்டறிதல் அமைகிறது.

சமீபத்தில் கண்சிவப்புடைய நோயாளியை வீட்டில், பணியிடத்தில் அல்லது கல்விநிலையத்தில் எதிர்பட்டதாக நோயாளி கூறலாம். அல்லது மேல் மூச்சுப் பாதை தொற்றின் சமீபத்திய அறிகுறிகளின் வரலாற்றைக் கூறலாம்.

பொதுவானப் பரிசோதனையில் நோயாளிக்குக் காய்ச்சலுடன் தொண்டை அழற்சியும் தசைவலி, சோர்வு அல்லது இரைப்பைக்குடல் கோளாறுகளும் காணப்படலாம். பின் வாய்த் தொண்டை சிவப்பாகக் கண்ணாடி நுண்ணறைகளுடனும் காணப்படும்.

மென்மையற்ற கழுத்து நிணநீர்ச்சுரப்பி நோயும் மென்மையான முன்காது நிணநீர்ச்சுரப்பி நோயும் இருக்கலாம்.

கண் பரிசோதனையில் காணப்படுவன:

ஒரு கண்மருத்துவ நிபுணரின் பிளவு-விளக்கு சோதனை கண்டறிதலுக்கு அவசியம்.

- கண்சவ்வில் மிகை இரத்தம் பரவல் ஆரம்பத்தில் இமை விழிக்கோளக் கீழ் சந்திப்பில் அதிகத் துலக்கமாக இருக்கும்.

- மிகைநீர் வடிதல்

- விழிச்சவ்வு வீக்கம்

- சார் கண்சவ்வு இரத்தக் கசிவு

- நுண்ணறை கண்சவ்வு எதிர்வினை

- காம்புக்கட்டிப் பொருமல்

- இமை வீக்கம்

- கீழ் இமையில் மென்மையும் தோலுக்கடியில் இரத்தக் கோர்வை

- இமையில் இலேசான பொருக்கு உருவாதல்

கண்சவ்வுப் படலம் மற்றும் போலிப் படலங்கள் எப்போதாவது காணப்படலாம்.

வெண்படல அழற்சியும் ஒளிக்கூச்சமும் அரிது.

ஆய்வகக் கண்டறிதல்:

தொண்டை கண்சவ்வுக் காய்ச்சலைக் கண்டறியப் பின்வரும் சோதனைகளைப் பயன்படுத்தலாம்:

- பாலிமரேஸ் தொடர் வினை மதிப்பீடு (PCR)

- ஒளிர் எதிர்பொருள் சோதனை

- இம்யுனோபெராக்சிடேஸ் சோதனை

- நிரப்பிப் பொருத்தும் சோதனை: அறிகுறிகள் தோன்றிய பின் இணை இரத்த மாதிரிகள் முதல் வாரம் மற்றும் 2-3 வாரங்கள் இடைவெளிகளில் எடுக்கப்படுகின்றன. ஆடனோவைரசுக்கு எதிரான உடல்பாய்ம எதிர்பொருட்கள் நான்கு மடங்கு அல்லது அதைவிட மேலாக அதிகரித்து இருந்தால் அது ஓர் அண்மை ஆடனோவைரல் தொற்றைக் குறிக்கும்.

- கீம்சா திசுவியல்: சாயமேற்றப்பட்டக் கண்சவ்வுச் சீவலை நுண்காட்டி மூலம் ஆய்ந்து உட்கருவிணைப்பு அல்லது நிணநீர்செல்கள் உள்ளனவா என அறிதல்.

- செல் வளர்ச்சி: மேற்செல் கட்டத்தில்தான் வைரசை வளர்க்க முடியும். ஏனெனில் இழையவலை ஊடுறுவிகள் எஞ்சிய வைரல் விளைவியத்தின் நோய்த்தடுப்புக் கூட்டுகளே என கருதப்படுகின்றன. (உண்மை வைரசுகள் அல்ல).

நொதி நோய்த்தடுப்பு மதிப்பீடு:

- ஆடனோ பிளஸ் சோதனை: இது துரித நோயியல் பரிசோதனையின் (Rapid Pathogen Screening (RPS) ஒரு விரிவான பொறிநுட்பம் ஆகும். இது ஒரு விளைவிய அடிப்படையிலான நோய்த்தடுப்பு மதிப்பீடு. ஆடனோவைரல் பொருட்கள் இருக்கின்றனவா என இச்சோதனை கண்டறிகிறது. வைரஸ் காணப்படவில்லை என்றால் நோயாளி கல்விநிலையம் அல்லது பணிக்கு விரைவாகத் திரும்ப இது உதவி செய்கிறது. ஆடனோ வைரஸ் தொற்றை உறுதிப்படுத்தும் திறனால் இந்நோய்க்குப் புதிய சிகிச்சைகளை ஆய்ந்து கண்டறிய முடியும். PCR சோதனை உணர்திறன் மிக்கது. ஆகவே கண்டறிவதில் கடினம் கொண்ட நோயாளிகளுக்கே ஆடனோபிளஸ் சோதனையைப் பயன்படுத்த வேண்டும்.

கீழ்வரும் நிலைகளில் இருந்து தொண்டை கண்சவ்வுக் காய்ச்சலை வேறுபடுத்திக் காணவேண்டும்:

- ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி

- கடும் இரத்தக்கசிவு கண்சவ்வழற்சி

- நுண்ணுயிரிக் கண்சவ்வழற்சி

- வைரல் கண்சவ்வழற்சி

- கிளமிதியல் தொற்று

- அரக்கக் காம்புக்கட்டி கண்சவ்வழற்சி

நோய்மேலாண்மை

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே மேலாண்மை செய்ய வேண்டும்.

பொதுவாகத் தொண்டை கண்சவ்வுக் காய்ச்சல், தானே தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளும் நோய். குறிப்பிட்ட எந்தச் சிக்கலும் இல்லாமலேயே 1-3 வாரங்களுக்குள் குணமாகிவிடும். இதற்கு பலன் அளிக்கும் சிகிச்சை எதுவும் இல்லை.

அறிகுறிகளின் கடுமையைப் பொறுத்து நோயாளிகள் கவனிக்கப் படுகின்றனர்.

மருந்தியலின் நோக்கம் நோய்க்கடுமையைக் குறைத்து சிக்கலைத் தடுப்பதே.

சில நோயாளிகளுக்கு எதிர்வைரல் சொட்டு தரப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட பலன் எதுவும் இல்லை.

தொண்டை கண்சவ்வு காய்ச்சல் ஆதரவு சிகிச்சையில் அடங்குவன:

- குளிர் ஒத்தடம்

- செயற்கைக் கண்ணீர்: முன் வெண்படல கண்ணீர்ப்படலத்தை நிலைப்படுத்தி கடினப்படுத்துகிறது. உலர் கண்ணில் ஏற்படும் கண்ணீர் படலம் உடைபடும் நேரத்தை நீட்டிக்கிறது.

- மேற்பூச்சுக் குழல் இறுக்கிகள்/எதிர்ஹிஸ்ட்டமைன்: கடும் அரிப்புக்கு பயன்படுத்தலாம். நிறுத்தினால் அறிகுறிகள் மீண்டும் ஏற்படும்.

- மேற்பூச்சு ஊக்கமருந்தல்லாத எதிர்-அழற்சி மருந்துகள்: அழற்சியைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

- மேற்பூச்சு நுண்ணுயிர்க்கொல்லிகள்: மேல்மட்ட பாக்டீரியா தொற்றைத் தடுக்கும்.

- இழைத்தசை வாத மருந்துகள்: கடுமையான ஒளிக்கூச்சத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

- மென் மேற்பூச்சு கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள்: கடுமையானப் படல கண்சவ்வழற்சி கொண்டவர்களுக்கும் பிந்திய சார் - மேல்தோல் ஒளிபுகாமையினால் குறிப்பிடத்தக்க அளவில் கண்பார்வை மங்கலான நோயாளிகளுக்கும் இவை பயன்படுத்தப்படுகின்றன. கோர்ட்டிகோஸ்டிராய்டுகள் அழற்சியைக் குறைக்கப் பயன்பட்டாலும் நோயின் இயற்கையான போக்கில் அவற்றினால் எந்தக் குறிப்பிடத்தக்கப் பலனும் இல்லை. வெண்படல ஒளிபுகாமை மறுபடியும் ஏற்படாமல் தடுக்க இந்தச் சிகிச்சையைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் சிகிச்சை பெறும் நோயாளிகள் கண்ணழுத்தம் உயர்தல் கண்புரை உருவாதல் போன்ற பக்க விளைவுகள் உருவாகின்றனவா என்று கவனிக்க வேண்டும்.

- மேற்பூச்சு நோய்த்தடுப்பு-அழுத்திகள் (உ-ம்.டேக்ரோலிமுஸ் களிம்பு): மேற்பூச்சு நோய்த்தடுப்பு-அழுத்திகள் தன்தடுப்பு அழற்சி பதில்வினைகளைத் தடுக்கும். தொண்டை கண்சவ்வுக் காய்ச்சலில் சார்-மேல்தோல் ஊடுறுவிகளுக்கு டேக்ரோலிமுஸ் ஒரு சிகிச்சை முறை. டேக்ரோலிமுஸ் செல் நோய்த்தடுப்பை அழுத்துகிறது.

- கண் கிருமிநாசினிகள் (உ-ம். பொவிடோன் – ஐயோடின்): இவை பரந்த அளவிலான கிருமி நாசினிகள் ஆகும். நோயின் கால அளவைக் குறைக்க பொவிடோன் ஐயோடின் பயன்படுத்தலாம்.

அறுவை மருத்துவம்:

இந்நோய்க்கு அறுவை மிகவும் அரிதாகவே செய்யப்படும். வடு கண்சவ்வழற்சி அல்லது இணைவிமை போன்ற கடுமையான நேர்வுகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

- கிளர்ம லேசர் ஒளி-சிகிச்சை வெண்படல அறுவை (PTK): சார்-மேல்தோல் ஒளிபுகாமையை அகற்ற கிளர்ம லேசர் ஒளி-சிகிச்சை வெண்படல அறுவையுடன் குறைந்த அளவு மைட்டோமைசினும் பயன்படுத்தப்படுகிறது.

- படலம் அல்லது போலிப்படல அகற்றல்: மெதுவாக உரித்து எடுத்து விட்டு ஒரு மேற்பூச்சு கோர்ட்டிக்கோஸ்டிராய்டு பரிந்துரைக்கலாம்.

- வளைமுகடு மறுவுருவாக்கம் (Fornix reconstruction)

- இமை உட்பிறழல் சரிசெய்தல்

நோய் முன்னறிதல்:

பெரும்பாலான தொண்டை கண்சவ்வுக் காய்ச்சல் குறுகிய காலமே இருக்கும்; தீங்கற்றது மற்றும் தானே குணமடையக் கூடியது. தொற்று 2-3 வாரங்களில் தானே குணமடைகிறது. பார்வை அச்சு பாதிக்கப்பட்டிருந்தால் சார்-மேற்தோல் ஊடுறுவிகள் பல மாதங்கள் நீடித்துப் பார்வையைக் குறைக்கும்.

சிக்கல்கள்

தொண்டை கண்சவ்வுக் காய்ச்சலின் சிக்கல்கள் வருமாறு:

- விழிப்புள்ளி வெண்படல அழற்சி

- சார்-மேற்தோல் ஊடுறுவிகள்

- மேலிணைவு நுண்ணுயிரித் தொற்று

- நீடித்தத் தொற்று

- கோர்ட்டிக்கோஸ்டிராய்டால் தூண்டப்பட்ட, நீடிக்கும் மருத்துவ சிகிச்சையுடன் நீடிக்கும் வெண்படல ஒளிபுகாமை.

தடுப்புமுறை

தொண்டை கண்சவ்வுக் காய்ச்சல் மிகவும் பரவும் நோய். பலனளிக்கும் சிகிச்சை இல்லாததால் நோயைக் கையாள தடுப்பு முக்கியம். கிருமி இருக்கும் பரப்பு அல்லது பொருளில் இருந்து வைரஸ் பரவலாம். நோயாளி பாதிக்கப்பட்டக் கண்ணைத் தொட்டுவிட்டுப் பின் பொருள்களைத் தொடுவதனால் நோய் பரவும். கண்ணோடு தொடர்புடைய அழகு சாதனங்கள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. அறிகுறி ஏற்பட்டு இரண்டு வாரத்துக்கும் மேல் ஒருவர் நோய் பரப்புவராகத் திகழுவார். எனவே பணி அல்லது கல்வி நிலையங்களைத் தவிர்க்க வேண்டும்.

தடுப்பு முறையில் அடங்குவன:

- நோயாளிகள் பிறரைத் தொடவோ அல்லது டிஷ்யூ, துண்டு, தலையணை, துணி, கைகுட்டை ஆகியவற்றைப் பகிரவோ கூடாது. கண் சிவப்பாக இருக்கும் வரை அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.

- கண் பராமரிப்பு அளிப்போர் நோயாளியைப் பரிசோதித்தபின் கைகளைக் கழுவ வேண்டும். கை கழுவிய பின்னரே நோயாளியைப் பார்ப்பது எனப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

- நோய்த்தடுப்பு ஆற்றல் குறைந்த நோயாளிகளைக் கவனிப்போர் இரண்டு வார காலங்களுக்கு நோயாளித் தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.

- கண் கருவிகள் தகுந்த முறையில் கழுவப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

- கண் சிவப்பு உடையவர்களுக்கு (பிற நோயாளிகளிடம் இருந்துப் பிரிக்கப்பட்டு) “சிவப்புக்கண் அறை” உருவாக்கப்பட வேண்டும்.

- நோயாளியின் குடும்ப உறுப்பினர்களுக்கு நோயைப் பற்றிய அறிவைப் புகட்ட வேண்டும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்