அறிமுகம்

உலர்கண் சவ்வழற்சி (KCS) அல்லது கண் உலர் நோய் பெரும்பாலும் கண்ணீர்க் குறைபாட்டால் ஏற்படுகிறது.

உலர்கண் சவ்வழற்சி நோயை, “மனவுலைவு, பார்வைத் தொந்தரவு, கண்ணீர்ப்படலத்தின் உறுதியற்ற தன்மை ஆகியவற்றால் விழிப்பரப்புக்கு சேதாரம் விளைவிக்கும் சாத்தியக் கூறுகளைக் கொண்ட கண்ணீர்ப் படலம் மற்றும் விழிப்பரப்பின் பல காரணி நோய்” என உலர் கண் பணிமனை 2007 (DEWS) வரையறுக்கிறது.

கண்ணீர்ப்படலத்துக்கு மூன்று உட்கூறுகள் உண்டு:

1. வெளிப்புற கொழுப்புப் படலம்: வெளிப்புற எண்ணெய்ப்படலமான இது கண்ணீர் ஆவியாகிவிடாமல் தடுக்கிறது. இமைகளுக்கு எண்ணெய்ப்பசை அளித்துக், கண்ணீர், இமை ஓரங்களில் கசியாமல் பாதுகாக்குகிறது.

2. நடு நீர்ப்படலம்: இது விழிவெண்படலத்துக்கு உயிர்வளியை அளித்து சிறுசிறு ஒழுங்கற்ற தன்மைகளை மூடி விழிப்பரப்பைச் சமமாக்குகிறது. நுண்ணுயிர் தொற்றுக்களைத் தடுத்து தூசிகளை கழுவி வெளியேற்றுகிறது.

3. உட்புற சளிச்சவ்வுப் படலம்: இது நடுப்படலத்தில் உள்ள நீரால் விழிவெண்படலத்தை ஈரமாக வைத்திருக்கிறது.

கண்ணீர்ப்படல உட்கூறுகளில் உண்டாகும் குறைபாட்டால் உலர் கண் நோய் ஏற்படலாம். எனினும் கண்ணீர் குறைபட்டினாலேயே பெரும்பான்மையில் இந்நோய் ஏற்படுகிறது.

கண்ணீருக்கு, சிறு அடிப்படைக் கூறும் பெரிய அனிச்சைக் கூறும் உண்டு. விழிவெண்படல உணர்வுத் தூண்டலால் அனிச்சையாகக் கண்ணீர் சுரக்கிறது.

இயல்பான கண்ணீர்ப்படலத்தோடு, சிறந்த பரவலுக்கும், மறுதளமாக்கலுக்கும் தேவைப்படுவன:

1. இயல்பான மென்மையான விழிவெண்படலப் பரப்பு

2. இயல்பான அளவில் இமைத்தல்

3. ஒத்த விழிப்பரப்பும் இமைகளும்

நோயறிகுறிகள்

பல நோயாளிகளுக்கு எந்த அறிகுறியும் இருப்பதில்லை. சிலருக்கு வெங்காயம் உரிக்கும்போதும் உணர்ச்சிவசப்படும்போதும் கண்ணீர் குறைவாகச் சுரப்பதைக் கவனித்து இருக்கலாம்.

பொதுவான அறிகுறிகள் வருமாறு:

1. கண் எரிச்சல்

2. கண்களில் எரியும் உணர்வு

3. கண்ணில் எதோ கிடப்பது போல் உணர்வு

4. சளி கசிதல்

5. கண் கணநேரம் மங்குதல் அல்லது பார்வைத்திறன் கூடிக்குறைதல்

6. மிகையாகக் கண்ணீர்பெருகுதல் (உலர் கண்ணின் காரணமாக அனிச்சையான சுரப்பு)

7. கண்சிவப்பு

குறைந்த அளவில் காணப்படும் அறிகுறிகள்:

1. களைப்பு உணர்வு அல்லது இமைபாரம்

2. ஒளிக்கூச்சம்

3. அரிப்பு

காரணங்கள்

அ. நீர்ப்படலக் குறைபாடு: அது பின்வருபவைகளாக இருக்கலாம்: (Aqueous layer deficiency)

1. உலர் கண் சவ்வழற்சி: கண்ணீர் சுரப்பி மட்டும் நார்க்கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது.

2. ஜோக்ரன் நோய்க்குறி: இது கண்ணீர், உமிழ்நீர் சுரப்பிகளையும் சளிச்சவ்வையும் பாதிக்கும். எதிருட்கரு எதிர்பொருட்கள், கீல்வாதம், மிகை காமாகுளபுலின் சோகை ஆகியவை இருப்பது இதன் தன்மை. இந்த மாற்றங்கள் தனியாக நிகழ்ந்தால் முதன்மை ஜோக்ரன் நோய்க்குறியாகும். உட்பரவிய செம்முருடு, நாட்பட்ட சிறார் கீல்வாதம், முதன்மைப் பித்தநீர் ஈரல்நோய், தசைநலிவு போன்ற நோய்களோடு இணைந்து ஏற்பட்டால் அது இரண்டாம்நிலை ஜோக்ரன் நோய்க்குறி ஆகும்.

3. தைராயிடு கண்நோய், இணைப்புத்திசுப்புற்று, கட்டி அல்லது போலிக்கட்டி ஆகியவற்றால் கண்ணீர் சுரப்பி அழிவுறல்.

4. கண்ணீர்ச்சுரப்பி அறுவை சிகிச்சையால் அகற்றப்படுதல்.

5. விழிவெண்படல வடுவால் கண்ணீர்ச்சுரப்பியின் வெளியேற்றும் நாளம் அடைபடுதல் அல்லது சளி சுரப்பிகளுக்கு இடையூறு செய்தல்.

6. பிறப்பின்போதே கண்ணீர்ச்சுரப்பி இல்லாமல் இருத்தல்.

7. வயதாக ஆக கண்ணீர் குறைவாகச் சுரத்தல்.

8. உயிர்ச்சத்து ஏ குறைபாடு.

9. நரம்புக் காயங்களால் உணர்வு மற்றும் இயங்கு அனிச்சை செயலிழப்பு.

ஆ. கண்ணீர் ஆவியாவதால் கண் உலர்தல். அது பின்வருபவையாக இருக்கலாம்: (Dry eye due to evaporation of tears)

1. கொழுப்புச் சுரப்பிகளின் செயலிழப்பால் அல்லது இமை ஓர அழற்சியால் கொழுப்புப் படலத்தில் குறைபாடு.

2. இமைத்தலில் குறை/குறைவு உ-ம்., பார்க்கின்சன் நோய் அல்லது அதிக நேரம் வாசித்தல், கணினி இயக்குதல் அல்லது வாகனம் ஓட்டுதல்

3. வெளிப்பட்டக் கருவிழிநோயால் விழிவெண்படலம் உலர்தல் உ-ம். முகமுடக்கு வாதம்.

4. விழிவில்லைகள் பயன்படுத்துவதால் உலர் கண்கள்.

5. வெப்பம், காற்றுப்பதனம், காற்றின் மிகைவேகம் அல்லது குறைந்த ஈரப்பதம் ஆகிய சூழலியல் காரணிகளுக்கு உட்படுவது.

நோய்க்கண்டறிதல்

கண்ணின் முன்பகுதியைப் பாதிக்கும் பிற நோய்களில் இருந்து உலர் கண் நோய் வேறுபடுத்தப்பட வேண்டும். உ-ம்: விழிவெண்படல அழற்சி, தொற்று நோய்கள், விழிவெண்படல கோளறுகள், கருவிழி நோய். மருத்துவமனை பரிசோதனைகள் மூலமும் சில சிறப்பு சோதனைகள் மூலமும் நோய் கண்டறியப்படுகிறது.

கண்ணீர்ப்படலத்தில் காணப்படுபவை: (Tear film)

1. கண்ணீர்ப்படலத்தில் கொழுப்பால் அழுக்கடைந்த சளி திரள்வதால் சளி இழைகள் அதிகரித்தல்.

2. பொதுவாக விளிம்பு கண்ணீர் திரவ மட்டம் குவிந்து 1 மி.மீ. உயரம் கொண்டதாக இருக்கும்.

3. கண்ணீர்ப்படலத்தில் அல்லது இமை ஓரமாக நுரை

விழிவெண்படல சோதனையால் அறியக் கூடியது: (Corneal examination)

1. விழிவெண்படலத்தில் புள்ளி போன்ற புண்கள்.

2. சளி படிமங்கள் படிதல். விழிவெண்படலத்தில் சற்றே மேடாகப் புண்கள்.

3. அதிக வலியுடன் கூடிய விழிவெண்படலத்துடன் ஒரு முனை இணந்த இழைகள்.

கண்ணீர்ப்படலம் உடைபடும் காலம் (BUT):

இது இறுதி இமைப்பிற்கும், முதல் உலர் புள்ளி தோன்றுவதற்கும் இடையில் இருக்கும் இடைவெளி ஆகும்.

கண்ணில் ஒளிர்சாயம் இடப்பட்டு அதை நோயாளி இமைத்தல் மூலம் பரப்பி பின் இமைப்பதை நிறுத்தி விடுகிறார். கோபால்ட் நீல வடிகட்டியின் கீழ் கண் சோதிக்கப்படுகிறது. சிறிது இடைவெளிக்குப் பின் தோன்றும் கறுப்புப் புள்ளிகள் உலர் பகுதிகள் உருவாகி இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. ஒரே இடத்தில் தோன்றும் உலர்ந்த பகுதிகள் அந்த இடத்தில் விழிவெண்படல கோளாறு இருப்பதைக் காட்டுகிறது; அது கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. 10 நொடிகளுக்கு உட்பட்ட உடைபடும் காலம் (BUT) உலர் கண் இருப்பதை உணர்த்துகிறது.

பெங்கால் இளஞ்சிவப்புச் சாய சோதனை (Rose Bengal test)

பெங்கால் இளஞ்சிவப்புச் சாயம் விழிவெண்படலத்தில் உலர்விழியால் உருவாக்கப்படும் சளி, செத்த மற்றும் செயலிழந்த உயிரணுக்களில் சாயமேற்றுகிறது. கண் உறுத்தலை உண்டாக்குமாதலால் ஒரு சிறு துளியையே பயன்படுத்தவும். போலியான நேர்முடிவுகளைத் தவிர்க்க குறிப்பிட்ட இடத்தில் மயக்க மருந்து உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

லிசமைன் பச்சை சோதனை: (Lissamine green test)

லிசமைன் பச்சைச் சாயம் உயிரணுக்களிலும், செயலிழந்த அல்லது செத்த உயிரணுக்களிலும் சாயமேற்றுகிறது. இது பெங்கால் இளஞ்சிவப்பு சாயம் போல உறுத்தலையும் கொட்டுவது போன்ற உணர்வையும் ஏற்படுத்தாது. ஆனால் சாயம் நிலைத்திருப்பதில்லை.

சிர்மர் சோதனை (Schirmer’s test) :

இச்சோதனையில் 35 மி.மீ. நீளமும் 5 மி.மீ. அகலமும் கொண்ட ஒரு பிரத்தியேகமான வடிதாள் (வாட்மேன் எண்.41), கண் கீழிமையின் நடு மற்றும் வெளிப்புற மூன்றாம் பகுதி சந்திப்பில் வைக்கப்படும்போது ஏற்படும் நீர்பரவல் அளக்கப்படுகிறது. கண் மெதுவாக உலர்த்தப்படுகிறது. நோயாளி கண்ணைத் திறந்தே வைக்கிறார். தேவைப்படும்போதே இமைக்கிறார். இதன் மூலம் அடிப்படையான மற்றும் அனிச்சை சுரப்பு அளக்கப்படுகிறது (சிர்மரின் சோதனை 1). ஆனால் இச்சோதனை மேற்பூச்சு மயக்கமருந்து அளித்து செய்யும்போது (சிர்மரின் சோதனை 2) அடிப்படை சுரப்பே அளக்கப்படும். ஏனெனில் அனிச்சை சுரப்பு கட்டுப்படுத்தப்படுகிறது; ஆனால் முற்றிலுமாக தடுக்கப் படுவதில்லை.

நீர்பரவல் 5 நிமிடம் கழித்து அளக்கப்படுகிறது. மயக்க மருந்து இல்லாமல் 10 மி.மி. நீர்பரவலும் மயக்க மருந்துக்குப் பின் 6 மி.மீ நீர்பரவலும் இயல்பான அளவு எனக் கருதப்படுகிறது.

இன்ஃப்ளேமாடிரை சோதனை 2013 : (InflammaDry test)

இது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சமீபத்திய குறுகிய நேர சோதனையாகும். இதற்கு இரண்டு நிமிடமே தேவை. இது கண்ணீரில் இருக்கும் அழற்சி குறிப்பானான அடிப்பொருள் மெட்டலோப்ரோட்டினேஸ்-9 –ன் அளவை அளக்கிறது. உலர் கண் உள்ளவர்களுக்கு இப்பொருள் அதிகமாக இருக்கும்.

பதிவு உயிரணுவியல் (Impression cytology):

இதன் மூலம் உயிரணுக்களின் தொகை அளவிடப்படுகிறது. உலர் கண்ணுக்கு வழிவகுக்கும் கண் பரப்பு மாற்றங்கள் அதிகரிப்பதைக் கண்காணிக்க இது உதவுகிறது.

கண்ணீர்க் கூறுகளின் அளவைக் கணக்கிடல்:

கண்ணீர்ப்படலத்தின் கரைதுகள் அடர்த்தியை அளவிடல் அல்லது கண்ணீர் புரதங்களின் பகுப்பாய்வு உலர்கண்னைக் கண்டறிய உதவுகிறது.

பயன்படுத்தப்படும் பிற சோதனைகள்: (Other tests)

அ. கண்ணீர் நிலைத்தன்மை ஆய்வமைப்பு

ஆ. கண்ணீர்ப் பெரணி சோதனை

இ. கண்ணீர் செயல் அட்டவணை

பொருத்தமான தடுப்பாற்றல் இரத்தப் பரிசோதனைகளாலும் உதட்டு உமிழ்நீர்ச் சுரப்பிகளின் திசு ஆய்வாலும் உலர்கண் சவ்வழற்சியால் உண்டாகும் ஜோக்ரன் நோய்க்குறி இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

நோய் மேலாண்மை

அறிகுறிகளுக்கேற்ற நிவாரணத்தை அளிப்பதே இலக்கு ஆகும். மிருதுவான விழிவெண்திரைப் பரப்பு, மென்மேலும் சேதம் ஆகாமலும், அறிகுறிகள் அதிகமாகாமலும் தடுக்கும்.

பல்வேறு நடைமுறைகளாவன: (Various modalities)

1. இருக்கும் கண்ணீர் ஆவியாவதைக் குறைக்க அதிக அறை வெப்பத்தைத் தவிர்த்தல்.

2. ஆவியாதலைக் குறைக்க அறை ஈரப்பதமூட்டி அல்லது ஈரஅறைக் கண்ணாடி பயன்பாடு.

3. கண்ணைப் பாதுகாக்க விழிவில்லைகளைப் பயன்படுத்தலாம். இவை சிலிக்கான் ரப்பரால் ஆனவை அல்லது வாயுவை அனுமதிக்கும் விழிவெண்படலத்தால் தாங்கப்படும் சாளர அமைப்பு உள்ள அல்லது இல்லாத கடினமான விழிவில்லைகள் அல்லது அதிகமாக வாயுவை அனுமதிக்கும் இரவிலும் அணியக்கூடிய வில்லைகள் ஆகும்.

4. பரவலாகப் பயன்படுத்தும் மருந்துகள் மசகுத்தன்மை அளிப்பவை. இலேசான மற்றும் மிதமான உலர்கண்ணழற்சிக்கு செயற்கை கண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இவை குறுகிய காலமே நிவாரணம் அளிப்பதால் அடிக்கடி இடப்பட வேண்டும்.

செயற்கைக் கண்ணீர் கீழ்வரும் வகைப்பட்டவை: (Artificial tears may be of following types)

அ. மரநாரில் இருந்து உருவாக்கப்பட்டவை

ஆ. மியூக்கோமிமெட்டிக்குகள்

இ. பாலிவினைய்ல் ஆல்கஹால்

பிற கண்ணீரப் பதிலிகள்: (Other tear substitutes)

அ. பொவிடோன் மற்றும் சோடியம் குளோரைடு

ஆ. மேற்புறச் செல்லைக் குணப்படுத்த சோடியம் ஹையலுரோனேட்

இரவு தூங்குவதற்கு முன் தாது எண்ணெய்க் களிம்பைப் பயன்படுத்தலாம்.

5. மைக்கொலிட்டிக் சொட்டுக்கள் உ-ம். விழிவெண்படல இழைகளுக்கும், சளிக்காறைகளுக்கும் அசெட்டைல்சிஸ்டின் பயன்படுத்தலாம்.

6. எதிர்-அழற்சி மேற்பூச்சு மருந்துகளான கோர்ட்டிகோடிராய்டுகள், சைக்ளோஸ்போரின், அல்லது மேற்பூச்சு அல்லது உள்மருந்து ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் லிப்பிட் மீடியேட்டர்கள் உருவாவதைத் தடை செய்கின்றன) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

7. மேற்பூச்சு அல்லது உள்மருந்து டெட்ராசைக்கிளின் பயன்பாடு.

8. ஆட்டோலோகஸ் அல்லது தொப்புள்கொடி சீரம் பயன்படுத்துதல். கடுமையான உலர்கண் சவ்வழற்சியும் புள்ளியுடைய மேற்புறசெல் குறைபாடும் விழிவெண்படல சேதமும் இருந்தால் சீரம் கண்சொட்டுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

9. உள்மருந்தாக இம்யுனோசப்ரசண்டுகளைப் பயன்படுத்துதல்.

10. மேல் கீழ் இமைகளை இணைத்து சிறு தையல் இடுவதன் மூலம் இமைமூடாமைப் பிரச்சினை உள்ளவர்களுக்குக் கன்ணீரைத் தேக்க முடியும்.

11. கடுமையான உலர்கண் சவ்வழற்சி உடையவர்களுக்கும் மருந்து நச்சாகும் தன்மை கொண்டவர்களுக்கும் கண்களில் இருந்து மூக்கிற்குக் கண்ணீர் பாயும் துளையை அடைப்பது பயனுள்ளதாக இருக்கும்.

துளையடைப்பு (Occlusion of punctum)

அ. தற்காலிகமானது: துளையை பிளக், சிலிகோன் குச்சி, அல்லது 2/0 கேட்கட் தையல் மூலமாக அடைக்கலாம். முதலில் நான்கு துளைகளுமே அடைக்கப்படும். அடைப்பதால் கண்ணீர் தேங்குகிறதா இல்லையா என முதலில் சோதிக்கவே இவ்வாறு செய்யப்படுகிறது. விளைவின் அடிப்படையில் நிரந்தர அடைப்பு திட்டமிடப்படும்.

ஆ. நிரந்தரமானது: கடுமையான உலர்கண் சவ்வழற்சியும் சிர்மர் சோதனை மதிப்பு 2 மி.மீ அல்லது குறைவாகவும் உடையவர்களுக்கு இது மேற்கொள்ளப்படுகிறது. ஒரு தீய்ப்பானின் உதவியால் கண்ணீர்ப்பையையும் துளையையும் இணைக்கும் பாதையை கரும்வெப்பத்தில் அல்லது ஆர்கான் லேசர் கொண்டு மென்மையாக வெப்பப்படுத்துவதின் மூலம் இது செய்யப்படுகிறது. கண்ணீர் அளவு கூடிக்குறையும் இளம் வயது நோயாளிகளுக்கு இதைத் தவிர்க்க வேண்டும்.

12. வெண்படல மடலை மேற்புறமாக இழுப்பதினால் உலர்தலையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் தவிர்க்கலாம்.

13. சளிச்சவ்வு ஒட்டல்

14. பனிக்குடப்படல மாற்று சிகிச்சை செய்யலாம்.

15. மசகிற்காக உமிழ்நீர்ச் சுரப்பி நாள இடமாற்றம்.

16. மெல்லிய பிதுங்கிய வெண்படலம், துளையாகும் நிலையில் அல்லது வெளிப்படையான துளைகள் ஆகிய குறைபாடுகளுக்கு ஒட்டும் சயானோஅக்ரிலேட் அல்லது வெண்படலத்தால் ஒட்டலாம்.

சிக்கல்கள்

மிதமான உலர் கண்சவ்வழற்சியில் சிக்கல்கள் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் குறைவாகவே இருக்கும்.

கடுமையான நிலையில் காணப்படுபவை:

அ. இமைச்சுருக்கம்

ஆ. முன் கண்ணை மூடியுள்ள மேற்புறச் செல்லடுக்குகளின் முறிவு

இ. விழிவெண்படலம் மேலோட்டமாக புற நாளப்பெருக்கம் அடைதல்

ஈ. விழிவெண்படலத்தில் இரண்டாம் கட்ட நுண்ணுயிர்த் தொற்று ஏற்படுதல்

உ. விழிவெண்படலத்தில் மென்பிதுக்கம் உருவாதல்

ஊ. விழிவெண்படலம் உருக்குலைந்து மறைதல்

எ. வெண்படலத் துளையும் அதன் பின்விளைவும்

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்