நலத்தின் விளக்கம்

நலம் என்பது மனித வாழ்க்கையில் முக்கியமானதாகும். தனி மனிதனிடமோ, (வித்தியாசமான) பலரிடமோ, வித்தியாசனமான அர்த்தங்களையும், கருத்துகளையும் கொடுக்கக் கூடியது. அன்றாட வாழ்க்கையில் மனிதன் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் நலம் முக்கியமானதாகும். நலம் ஆடம்பர வாழ்க்கையிலும் முக்கியத்துவத்தை எடுத்து தரக்கூடியது. எனவே நலம் என்பது ஒரு உயரிய பண்பிணை தரக் கூடியதாகும்.

நலம் என்பது மனிதனின் தனிப்பட்ட வாழ்வில் அவனுடைய உடல்நலம், மனநலம், சமுதாயத்தில் உள்ள உறவு மற்றும் அறிவு சார்ந்த செயல்பாடும் மதசம்பந்தமான நல்உறவுகளையும் உள்ளடக்கியதே நலமாகும். 'நலம் என்பது வெறும் நோயின்மையை மாத்திரம் குறிப்பதல்ல. அது முழுமையான உடல் மனம் மற்றும் சமுதாய அளவிலான நலத்தை குறிப்பதாகும்” என உலக நிறுவனம் வரையறுத்துள்ளது. உடல் நலக்குறைவு என்பது தனிப்பட்ட மனிதனின் இயலாமை. உடல் அளவிலும், மனதளவிலும் தன்னால் ஏற்றுக் கொள்ளக் கூடாத நிலையேயாகும்.

நலத்தின் கருத்துகள்

நலம் என்பது நோயின்மையே, அதற்கு மாறானது நலக்கேடாகும்.

நலம் முழுமையான உடல்நலம் என உலக நிறுவனம் கூறும் போது அது உடல் நலம், மனநலம், சமுதாயத்தில் உள்ள உறவு மேலும் மதசம்பந்தமானதும் என வலியுறுத்துகிறது.

நலம் உடலின் முக்கிய பணிகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும் வலியுறுத்துவது மட்டுமின்றி உணவையும், உடற்பயிற்சியும் நலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

நலம் மற்றவர்களின் உறவை வளர்ப்பது மட்டுமின்றி மற்றவர்களின் உணர்வுகளையும் சமுதாய தொடர்புகளையும் எவ்வளவு முக்கியம் என்பதையும் காட்டுகிறது. நலம் தனி மனிதனுக்கு எப்படி முக்கியம் என காட்டுகிறது. நலத்தினை பெறாவிட்டால் யாராலும் நலம் தர இயலாது.

செவிலியர் துறையின் வரலாறு

செவிலியர்களின் பணி மனித இனம் தோன்றிய காலத்திலேயே ஆரம்பமாகிறது. மனித இனம் தோன்றிய பொழுதே, நோயுற்றோருக்கு தேவையான கவனிப்பு, வசதிகள் செய்து கொடுக்கும் அவசியமும் உண்டாயிற்று. மனித நாகரீகம் ஆரம்பமான காலத்திலிருந்தே, உணவும் கவனிப்பும் மனித வாழ்வுக்கு அவசியமானதாகும். மனித இனத்தின் வாழ்வும், செவிலியப்பணியும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதபடி, ஒருங்கிணைந்து செல்கிறது. செவிலியப்பணி கலைகளில் பழமையானதாகவும், பணிகளில் புதியதாகவும் விளங்குகிறது. செவிலியர் என்னும் வார்த்தையானது இலத்தின் மொழியில் நியூட்ரிஸியஸ் அல்லது போஷாக்கு அளிப்பவர் என்னும் வார்த்தையில் இருந்து மருவி வந்தது. மருத்துவம் மற்றும் செவிலியப்பணி இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து புராணங்களிலும், பழங்கால கிழக்கு மற்றும் மேற்கு கலாச்சாரங்களிலும், மதங்களிலும் காணப்பட்டது.

செவிலியப் பணி என்பது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஆசிரியர்களால் விவரிக்கப்பட்டது. ஆண்டர்சன் என்பவர் “செவிலியப்பணி என்பது உடல்நலம் உள்ளவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் அவர்களுடைய தினசரி நடவடிக்கைகளில் உதவி செய்வது, அதன் மூலமாக அவர்கள் நோயிலிருந்து மீள்வதற்கு அல்லது அமைதியான முறையில் இறப்பதற்கும், பிறர் உதவியின்றி நோயாளிகளே தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய பலத்தையும் நம்பிக்கையையும் அறிவையும் பெற வழிவகை செய்கிறது” என்று கூறியுள்ளார். செவிலியப் பணியின் மிக முக்கிய நோக்கமானது தனி நபர்கள் சுயமாக தங்களை கவனித்துக் கொள்ள உதவுவது அல்லது அவ்வாறு தன்னிச்சையாக செயல்பட முடியாதவர்களுக்கு உதவுவதேயாகும்.

பன்னாட்டு செவிலியர் குழுமத்தின் கூற்றின்படி செவிலியப்பணி என்பது "நோயாளி மற்றும் உடல் நலமுடையோர்கள் தங்களுடைய நடவடிக்கைகள் மூலம் உடல் நலமடையவும் அல்லது நோயுற்றோர் அதிலிருந்து விடுபடவும் அல்லது அமைதியான முறையில் இறப்பதற்கும் உதவி செய்கிறது. இதன் மூலம் அவர்கள் அதற்கு தேவையான உடல்வலிமை, மனவலிமை மற்றும் அறிவுத்திறன் பெற்று விரைவில் பூரண குணமடைந்து அதிவிரைவில் தன்னிச்சையாக செயல்பட உதவும் பணியாகும்”.

செவிலியப்பணி ஒரு பழமையான கலைத்திறன் வாய்ந்ததும், அதே சமயம் அத்தியாவசிய நவீனப்பணியும், மனித இனத்திற்கு சேவை செய்யும் உன்னதமான பணியுமாகும் அனைத்து தரப்பு மக்களுக்கும்: அவர்கள் உடல்நலம் குன்றியவர்களோ அல்லது உடல் நலமிக்கவர்களோ, வசதியானவர்களோ, ஏழைகளோ, கல்வி கற்றவர்களோ, கல்லாதவர்களோ, இளமையானவர்களோ, முதுமையானவர்களோ, வேலை செய்யுமிடத்திலோ, விளையாடுமிடத்திலோ, மருத்துமனைகளுக்குள்ளோ, வெளியிலோ, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஏதேனும் ஒரு வழியில் செவிலிபணி அவர்களை சென்றடைகிறது. செவிலியப்பணி மனிதநேயமிக்க விஞ்ஞானப்பூர்வமான, கல்வி மூலம் மக்களுக்கும், சமூகத்திற்கும் சீரிய தொண்டாற்றும் பணி ஆகும். தனிப்பட்ட நபர்களுக்கு அவர் தம் குடும்பத்தாருக்கும் உடல் நலமடைவதற்குரிய வழிவகைகளை வலியுறுத்துகிறது.

செவிலியப்பணி அறிவியல் அறிவை அடைப்படையாகக் கொண்டது மட்டுமன்றி, அது கலைதிறன் மிக்கதும் ஆகும். அதன் மூலம் திறன் வாய்ந்த கவனிப்பை நோயாளிகளுக்கு அளிக்கிறது. அது பொருத்தமான முறையான உறவின் மூலம் நோயாளிகள், அவர்கள் குடும்பத்தினர், மருத்துவர் மற்றும் நோயை குணப்படுத்த கடமைபட்டவர்களுடன் ஒன்றுபட்டு நோயாளி நலம் பெற செயல்படுகிறது. செவிலியப்பணி நோயைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமன்றி உடல் நலத்தை பேணுவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. திறமைமிக்க செவிலியப்பணி ஒரு மனிதனின் உடல்நலம், மனநலம், சமூகநலம் மற்றும் ஆன்மீக நலத்தை கருத்தில் கொண்டு பணியாற்றி ஒரு மனிதனின் உடல், மனம், ஆன்மா முழுவதும் நலமுடன் விளங்க உதவி செய்கிறது. விரிவாகச் சொல்லும்போது செவிலியப்பணி நோயுற்றோர், வயதானோர், ஊனமுற்றோருக்கு உதவுவது மட்டுமின்றி உடல்நலத்தைப்பேணவும் நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

முதன் முதலாக ஒரு தாய் தனது குடும்பத்தினரின் நலனை பேணும்பொழுதே செவிலியப்பணி துவங்கிவிட்டது. அந்த தாயின் பராமரிப்பு அல்லது கவனிப்பு நாளடைவில் பணியாகவும் மாறிவிட்டது. பின் மனிதன் நாகரீகம் அடைய அடைய மனிதனது தேவைகளுக்கு ஏற்ப அது பெரும் மாறுதலடைந்துள்ளது. செவிலியப்பணியின் முன்னேற்றத்தை பற்றி படிக்கும் பொழுது செவிலியப்பணிக்கு ஏற்பட்ட இன்னல்களையும் இடையூறுகளையும் தகர்த்தெறிந்து எவ்வாறு முன்னேற்றமடைந்தது என்பதை நாம் உணரலாம். சமூகத்தில் உடல் ஊனமுற்றோரிடமும் உடல்நலம், மன நலம் குன்றியவர்களிடமும் இரக்கம் அன்பும், உதவியும் பாராட்டுவதே மனிதநேயப் பண்புகளில் மிக உன்னதாமான பண்பாகும். இந்த பண்பானது சமய சாஸ்திரங்களாலும், நம்பிக்கைகளாலும், புத்துயிர் பெரும் போது மக்களை சேவை மனப்பான்மையுடனும், தியாக உணர்வுடன் கூடிய ஒரு வாழ்க்கை வாழ வழி காட்டுகிறது இத்தகைய உணர்வுடன் சிறப்பான பயிற்சியும் அனுபவங்களும் சேரும்பொழுது செவிலியப்பணி ஒரு உன்னதமான அத்தியாவசியப் பணியாக அமைகிறது.

முற்காலத்தில் செவிலியப்பணி

அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கண்டெடுக்கப்பட்ட பாடல்கள், புராணக்கதைகள் மற்றும் இதர கண்டுபிடிப்புகளின் மூலம் முற்காலத்தில் மனிதர்கள் நோயுற்றோரை எவ்வாறு பராமரித்தனர் என்பதை அறியலாம் முற்காலத்தில் தீய ஆவிகள் உடலில் நுழைவதால் நோய்கள் உண்டாவதாக மனிதர்கள் நம்பினார்கள். அந்த தீய ஆவிகளை வெளியேற்ற உடம்பை பல சித்திரவதைகளுக்குள்ளாக்கினர். உடம்பை பட்டினி போட்டும் அடித்தும் துன்புறுத்தியும், குமட்டுகிற மருந்துகளைக் கொடுத்தும் உடுக்கை அடித்தும் மந்திரங்களை சொல்லியும் திடிரென அதிர்ச்சிக்குள்ளாக்கியும் தீய ஆவிகளை வெளியேற்ற முயற்சி செய்தனர். சில சமயங்களில் பாதிக்கப்பட்ட பாகங்களில் துளை செய்து, தீய ஆவிகள் உடலிலிருந்து வெளியேறுவதாக நம்பினர்.

இவையின்றி மேலும் பல வழிகளிலும் நோய் குணமடைய வழி கண்டனர். மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகளான உடம்பை பிடித்துவிடுதல், ஒத்தடம் கொடுத்தல், உடம்பில் துறையிடுதல், முறிந்த எலும்புகளுக்கு கட்டுப்போடுதல், சூடான மற்றும் குளிர் நீர் குளியல் போன்ற முறைகளை கடைபிடித்தனர். இந்த மருத்துவ மற்றும் செவிலியப்பணியினை முக்கியமாக மதப்பணிகளில் ஈடுபட்டோரே செய்து வந்தனர்.

ஆரம்பகால நாகரீகங்களில் செவிலியப்பணி

எகிப்தியர்

எகிப்தியர்கள் மருத்துவத்தை தெய்வீகப்பணியாகக் கருதினர். சுமார் கிமு 1600 ல் எகிப்தியர்களால் முதல் மருத்துவ பதிவேடுகள் எழுதப்பட்டன. பழங்கால கோவில்களிலிருந்தும், பிரமீடுகளிலிருந்தும் எடுக்கப்பட்ட இந்த பதிவேடுகள் "ஹிரோகிளைபிக்” எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயின் தன்மைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்ட மருந்துகள் ஆகியவற்றை நாம் அறிகிறோம். கோவில்களே பெரும்பாலும் மருத்துமனைகளாக உபயோகிக்கப்பட்டது.

மருத்துவம் மற்றும் செவிலியப்பணியை மத குருமார்களே கவனித்து வந்தனர். சமூக அந்தஸ்துடைய பெண்கள், பெண் மதகுருக்களாகி கோவில்களில் செவிலியப்பணியை மேற்கொண்டனர். வீட்டில் நோயுற்றோரை தாய் மற்றும் இதர பெண்கள் கவனித்துக்கொண்டனர். முக்கியமான மதகுருமார் மற்றும் மருத்துவர் இம்ஹோடெப், அவர் தம் அன்பான சேவையினாலும் நோய்களை குணப்படுத்தியதாலும் அவர் தெய்வத்தன்மை வாய்ந்தவராகக் கருதப்பட்டார். இறந்த உடலை பதப்படுத்துதல் முறை உடலியல், மூலிகையியல் மற்றும் மருந்தியல் வளர்ச்சிக்கு அடிகோலியது; எகிப்தியர்கள் ஏறத்தாழ 250 வகையான நோய்களையும் அதற்குரிய மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகளையும் அறிந்திருந்தனர். இந்த புனித நூல்கள் மதகுருமார் மருத்துவர்களால் பின்பற்றப்பட்டன. நோயாளிகள் இறந்தாலோ அல்லது நூல்களில் கூறப்பட்டவாறு நடக்கவில்லையென்றாலோ அவர்கள் தண்டனைக்குள்ளாயினர். எகிப்தியர்கள் முதலில் மருத்துவத்திலும் செவிலியப்பணியிலும் வளர்ச்சி அடைந்தாலும், அக்காலத்தில் அறுவைச் சோதனைகள் அனுமதிக்கப்படாததாலும், தகுந்த மருத்துவ ஆராய்ச்சிகள் செய்யப்படாததாலும் இத்துறையானது பின்தங்க தொடங்கியது. இத்துடன் ரோமப் பேரரசின் வளர்ச்சியும் இதன் மறைவிற்கு வழி கோலியது.

கிரேக்கர்கள்

கிரேக்க நாடு இந்தியாவைப்போல கிரேக்க நாகரீகத்திலும் மருத்துவம் சமயத்தையே சார்ந்திருந்தது. கிரேக்கப் புராணங்களில் சூரிய கடவுளான அப்பல்லோ, நோய் தீர்க்கும் கடவுளாகவும் அவரது மகன் அஸ்கிலிபியஸ் கிரேக்க மருத்துவக் கடவுளாகவும் கருதப்பட்டனர். கிரேக்கர்கள் அப்போலோவையும் அஸ்கிலிபியஸையும் மற்றும் அப்போலோவின் மகளான ஹைஜியா (உடல் நலக் கடவுள்) வையும் தங்களது நோய்கள் தீர வேண்டினர். வழிபடும் கடவுளின் கோவில்களே மருத்துவச் சேவைக்காவும் பயன்பட்டன. மதகுரு வைத்தியர்களே அதற்கு பொறுப்பாளர்களாக இருந்தனர். கோவில்கள் சுத்தமான, சுகாதாரமான, நல்ல காற்றோட்டமுள்ள கிராமப்புறங்களில் அமைந்திருந்தன. கிரேக்கர்கள் முழுமையான உடல் நலத்திற்கும் நல்லழகிற்கும் முக்கியத்துவமளித்தனர். இழிவானதும், உடல் நலமின்மையும் இல்லை. ஏதென்னில் இளைஞர்கள் தங்கள் உடல்நலத்தைப் பேணுவதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.

கிரேக்கர்கள் உடல் நலம் பேணுவதில் மற்றவரும் கண்டிராத வகையில் முன்னேற்றமடைந்திருந்தனர். உடல் சுகாதாரம், உடற்பயிற்சி மற்றும் நல்ல உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டனர். கி.மு. 100ல் “விஞ்ஞான மருத்துவத்தின் தந்தையான ஹிப்போக் ரேட்ஸ்”. தமது கண்டுபிடிப்புகளின் மூலம் மருத்துவ உலகிற்கு ஒரு அடிக்கல் நாட்டினார். அவர் நோய்களும் நோய் தடுப்பு முறைகளும் சில இயற்கை விதிகளுக்குப்பட்டது என கண்டறிந்தார். அவர் மேலும் மருத்துவர்களுக்கான ஒழுக்க நெறிகளையும் ஏற்படத்தினார்.

அவருடைய ஒழுக்க நெறிகளை அடிப்படையாகக் கொண்டு சில மாற்றங்களுடன் மருத்துவ மாணவர்கள் தங்கள் நன்னடத்தையே மேற்கொள்கின்றனர். செவிலியர்களுக்கான வழிகாட்டி நைட்டிங்கேல் அம்மையாரின் உறுதிமொழியும் அதனை அடிப்படையாகக் கொண்டதே முதன் முதலாக ஹிப்போகிரேட்ஸ் மருத்துவத்தையும், சமயத்தையும் தனித்தனியே பிரித்தார். கிரேக்கர்களின் ஆதிக்கம் மற்ற நாடுகளுக்கு பரவிய பொழுது அவர்கள் ஏற்படுத்திய அமைப்புகள் பிற்காலத்தில் நவீன நகர மருத்துவமனைகளாக மாறின. கிரேக்கர்கள் அறிவியல் பூர்வமாக நோய்களைக் கண்டறியவும் அவற்றை முறையாக பதவி செய்யவும் துவங்கினர்.

ரோம நாகரீகம்

ரோமானியர்கள் பொதுச் சுகாதாரத்தில் சிறந்து விளங்கினர். அவர்கள் சுகாதார முறைகளையும் கழிவுநீர் கால்வாய்களையும், பொதுக்குளியறைகளையும் பொது மருந்தகங்களையும் ஏற்படுத்தினர். ரோம் பிரபுக்கள் குடும்பத்தை சார்ந்த பெண்கள் நோயுற்றோரைக் கவனித்து கொண்டனர். கிறிஸ்தவ மதம் தோன்றியவுடன் பெண் மற்றும் ஆண் மத குருமார்கள் செவிலியப்பணிகளை மேற்கொண்டனர். கி.மு. 100ல் வாழ்ந்த கிரேக்க மருத்துவரான கேலன் என்பவர் மிருகங்களின் உடலில் பல ஆராய்ச்சிகள் செய்து உடல் கூற்றையும் நோய்களையும் கண்டறிந்தார். நோயாளிக்கு குளியல், மலக்குடல் கழுவுதல், வாந்தி எடுக்க செய்தல், சிசுத்தாரை. சிறுநீர் குழாய் வழியாக திரவம் பிச்சியடித்தல். தொண்டையில் நீர் வைத்து கொப்பளிக்கச் செய்தல், ஒத்தடம் கொடுத்தல், தேய்த்தல் இரத்தக்குழாயை கீறி இரத்த அளவை குறைத்தல் முதலிய செவிலிய சிகிச்சை முறைகளாக கையாளப்பட்டன.

செவிலியர் நோயாளி நடப்பதற்கும் அசைவதற்கும் உதவி புரிவதுடன், அவன் அல்லது அவள் தூய்மையான படுக்கை விரிப்பதற்கும் அறிந்திருந்தனர். மருந்துகளின் கூட்டு பொருள்களையும் அறிந்திருத்ததாலும் தேவைப்படும் போதெல்லாம் மனமுவந்து வேலை செய்யவும் முன் வந்தனர். கிமு 700-600 ல் திருவள்ளுவர் தமது பாடல்களில், மருத்துவத்தின் உயரியத்தன்மையைப்பற்றி புகழ்வதுடன், மருத்துவ கவனிப்பிற்கு நோயாளிகளும், மருத்துவர்களும் செவிலியர்களும் இன்றியமையாதவர்கள் என்று எடுத்துரைத்துள்ளார். கிமு 264ல் அசோக பேரரசர் நோய்வாய்ப்பட்ட மனிதர்களின், பிராணிகளின் கவனிப்பில் முக்கிய மாற்றத்தினை கொண்டுவந்தார். இவர் எண்ணற்ற மருத்துவமனைகளை ஆரம்பித்த தோடு அதில் பணிபுரியும் பெண்களுக்கு தேவையான கல்வியையும் பயிற்சியையும் அளிக்க வகை செய்தார்.

மடாலயங்களில் பல்கலைகழகங்கள் ஏற்படுத்தப்பட்டு அவை மருத்துவம், கல்வி மற்றும் சேவைகளுக்காக புகழ் பெற்று விளங்கின. நோயாளிகளை கவனிப்போருக்கான ஒழுக்க நெறிகள் மிகவும் கடுமையாய் பின்பற்றப்பட்டன. முதலில் ஆண்கள் நோயாளிகளுக்கு சேவை செய்ய எத்தகைய எதிர்பார்ப்பும் இன்றி தங்களை அர்பணித்துக் கொண்டனர். நோயாளிகளை கவனிப்பவர்கள் நன்னடத்தையும், தூய்மையானவர்களாகவும் புத்திசாலிகளாகவும் அன்பானவர்களாகவும் திறமை வாய்ந்தவர்களாகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டனர்.

கிறிஸ்துவின் காலம் - முன்பகுதி

செவிலியப்பணி கிறிஸ்தவ காலமுன் பகுதி காலங்களில் நோயாளிகளின் கவனிப்பு முறைகள், சமய நம்பிக்கைகளை சார்ந்திருந்தது. நோயினால் ஏற்படும் துன்பத்தை கவனிப்பதற்கு எந்தவித எதிர்பார்புமின்றி சேவை செய்யப்பட்டது. கிறிஸ்தவ மதம் ஒருவர் எந்த வித எதிர்பார்புமின்றி மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அத்தகைய சேவை கடவுளிடம் நாம் காட்டும் அன்பே ஆகும். இந்தக் கொள்கை செவிலியரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுமின்றி சமூகத்தில் செவிலியர்களின் அந்தஸ்தையும் உயர்த்தியது. கிறிஸ்தவ மதத்திலிருந்து மக்களுக்கு தொண்டாற்றியவர்கள் சிலரைப் பற்றி பார்ப்போம்.

ஃபோபி

இவர் முதல் பெண் குருமாராவர். இவர் அறிவுக்கூர்மையும் தகுந்த கல்வியறிவும் உடையவராயிருந்தார். இவர் நோயாளிகளை அவர்களின் வீடுகளுக்குக்கே சென்று கவனித்துக் கொண்டார். இவரை தற்போதைய நவீன பொது சுகாதார செவிலியர்களுக்குகீடாக ஒப்பிடலாம்.

ஃபேபியோலா

இவர் மிகவும் இளமையான, அழகான மற்றவர்களை ஈர்க்கும் நற்குணங்கள் கொண்டவர். இவர் ரோம்பிரபுக்களின் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் தமது அரண்மனையை ஒரு மருத்துவமனையாக மாற்றினார். அதுவே ரோமின் முதல் கிறிஸ்தவ மருத்துவமனையாகும். தெருக்களில் வாடி வதங்கிய ஏழைகளையும் நோயாளிகளையும் தனது இருப்பிடத்திற்கு கொண்டு வந்து பராமரித்தார்.

மார்செல்லா

இவர் வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்த சீமாட்டியாவார். தகுந்த வசதியும், சுதந்திரமாக செயல்பட வாய்ப்பும் உடையவராதலால், அத்தகைய சீமாட்டிகளை ஒருங்கிணைக்கும் தலைவியாக இயங்கி அவர்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்தினார்.

இதற்கு இடைப்பட்ட காலங்களில் துறவியரும் கன்னியாஸ்திரிகளும் நோயாளிகளைக் கவனிக்கவும், ஏழைகளுக்கு ஆதரவு அளிக்கவும் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர். கீழ்கண்ட துறவிகளும், கன்னியாஸ்திரிகளும், ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் அருந்தொண்டாற்றினர். செயின்ட் டோமினிக் (1170-1221) செயின்ட் பிரான்சிஸ் அசிசி (1182-1226) செயின்ட் எலிசபெத் - ஹங்கேரி (1207-1231) செயின்ட் கேதரீன் சீயன்னா (1347-1380) மடாலயங்களின் மதச்சடங்குகளில் உதவியவர்கள் பெண் மதகுருமார்கள். வயதிலும், அறிவிலும் முதிர்ச்சி பெற்றிருந்த இவர்கள் கல்விப்பண் மத போதனைகள் செய்ததுடன், நோயாளிகளை அவர்கள் வாழுமிடங்களுக்கு சென்று கவனித்துக் கொண்டனர்.

கிறிஸ்துவ காலம் - பின்பகுதி

கிறிஸ்துவ மதம் தோன்றியவுடன் புதிய எண்ணங்களும், மாறுதல்களும் தோன்றின. மற்ற சில மதங்கள், நோயானது, நோயாளிகள் செய்த பாவத்திற்குரிய தண்டனை. அதை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று எண்ணின. ஆனால், கிறிஸ்தவ மதமோ, நோயுற்றோரை கவனிப்பது, கடவுள் பணிக்கு சமமானது என்றும், நோயுற்றோரை கவனிப்பது கடவுளிடம் அன்பு காட்டுவது எனவும் கூறினர். சேவை மனப்பான்மை மனித குலத்தில் உயரிய குறிக்கோளாக கருதப்பட்டது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி, தன்னலமற்ற தியாகமனப்பான்மையுடன் மனிதகுலத்திற்கு செய்யப்படும் சேவையானது கடவுளை சீரிய மனதுடன் தியானிப்பதற்கு ஈடாவதுடன் அப்பணியில் ஈடுபடுபவர்கள் கடவுளுக்குரிய தன்மைகளையும் அடைகிறார்கள்.

இத்தகைய கருத்துக்கள் நல்லுள்ளம் படைத்த ஆண்களையும், பெண்களையும் நோயுற்றோரை கவனிக்கும் பணிக்கு ஈர்த்தது. அவர்கள் தங்கள் வாழுமிடங்களை ஏழைகளுக்காகவும், நோயாளிகளுக்காகவும், சேவை செய்யுமிடங்களாக மாற்றினர். அத்தகைய இடங்கள் “டயகோனியா" என்றழைக்கப்பட்டன. கிறிஸ்தவர்கள் பாதிப்புக்குள்ளானபோது அங்கிருந்த மக்கள் அருகிலிருந்த கிறிஸ்தவ பேராலயங்களின் பிஷப்புகளிடம் உதவிக்காக சேர்ந்தனர். எனவே நோயாளிகளுக்கும், அனாதைகளுக்காகவும், முதியவர்களுக்காகவும், குஷ்ட நோயாளிகளுக்காகவும், வழிபோக்கர்களுக்கும் மருத்துவ வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களை ஏற்படுத்த வேண்டியதாயிற்று.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல்

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் கெய்ஸர்ஸ் வொர்த்திலுள்ள பள்ளியைப் பற்றி கேள்விப்பட்டு 1850ஆம் ஆண்டு அங்கு பயிற்சியில் சேர்ந்தார். அங்கு மூன்று ஆண்டு காலங்கள் தீவிரமான கடுமையான பயிற்சி பெற்ற போது தற்போதுள்ள பயிற்சி முறையிலுள்ள குறைபாடுகளை கண்டறிந்தார். பயிற்சிக்குப் பிறகு 1853 இல் அவர் இலண்டனில் உள்ள நோயுற்ற சீமாட்டியரை கவனிக்கும் ஒரு அமைப்பில் மேற்பார்வையாளராக சேர்ந்தார். 1854ஆம் ஆண்டில் நடந்த கிரிமியன் போரின் போது அங்கு காயமடைந்த வீரர்களுக்கு சேவை செய்யும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. பிளாரன்ஸ் நைட்டிங்கேலும் அவரது செவிலியரும் ஆயிரக்கணக்கான காயமடைந்த மற்றும் இறக்கும் தருவாயிலிருந்த நோயாளிக்கு சேவை செய்தனர். ஒவ்வொரு நாள் இரவும், நோயில் வாடும் வீரர்களைக் கவனிக்க பிளாரன்ஸ் நைட்டிங்கேல் கையில் விளக்குடன் சென்று பணிவிடை புரிந்தார். அந்த நேரங்களில் வீரர்களுக்கு அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு கடிதங்கள் எழுத உதவியதுடன், இறக்கும் தருவாயில் இருக்கும் வீரர்களுக்கு "இறுதிச்செய்தி” எழுத உதவினார். எனவே அவர் "கைவிளக்கேந்திய காரிகையார்” என்று பட்டம் பெற்றார்.

நைட்டிங்கேலும், அவரது குழுவில் இருந்த பல பயிற்சி பெறாத செவிலியரும் துருக்கியிலுள்ள ஸ்குட்டாரி என்னுமிடத்திலுள்ள ஆங்கிலேயரின் மருத்துவமனைகளுக்கு சென்றனர். அங்கு அவர் காயமடைந்த நோயாளிகள் தங்களுடைய இரத்தம் தோய்ந்த சீருடைகளுடன் தரையில் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்டார். போதுமான உபகரணங்களும், வசதிகளும் இல்லை என்பதையும் கண்டறிந்தார். மிகுந்த இரக்க உணர்வுடனும், பொறுப்புடனும், மருத்துவமனையைச் சீரமைத்து காயம்பட்ட வீரர்களுக்கு தகுந்த சிகிச்சையும் கவனிப்பும் கிடைக்க வழி செய்தார். தன்னுடைய முயற்சியாலும், மற்றவர்களின் பேராதரவினாலும் நைட்டிங்கேல் அம்மையார் அந்த இராணுவ மருத்துவமனையில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்தார். அவருடைய பெரும் முயற்சியின் மூலம் போர்க்காலத்தில் ஆங்கில வீரர்களின் இறப்பு விகிதம் 42 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைந்தது.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் 1860ஆம் ஆண்டு இலண்டனில் உள்ள செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் செவிலியர்க்கான முதல் பயிற்சி பள்ளியை துவங்கினார். எண்ணற்ற பதிப்புகளின் மூலமும், கடிதங்கள் மூலமாகவும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார் செவிலியப்பணி மற்றும் செவிலியக்கல்வி முறை பற்றிய தனது எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டவர். ஒரு மனிதன் நோயுற்றபோது நோயுற்ற பாகத்தை மட்டும் மனதில் கொள்ளாமல் மனிதனது மற்ற தேவைகளையும் கருத்தில் கொண்டு ஒரு முழுமையான கவனிப்பு (Holism) அளிக்க வேண்டும் என்ற முக்கிய கருத்தை முதன்முதலில் அறிவித்தவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரேயாவார்.

போருக்குப்பின் நைட்டிங்கேல் அம்மையார் இராணுவத்திலும், இராணுவ மருத்துவமனைகளிலும் சுகாதாரம் மேம்பட பாடுபட்டார். அவர் தனி ஒரு மனிதராகவே இங்கிலாந்தில் சுகாதார கவனிப்பு மேம்பட வகை செய்தார். இவர் நவீன செவிலியக் கல்விக்கு அடிகோலியவராவார். இவர் போர்ட்பிட் என்னுமிடத்தில் முதல் இராணுவ மருத்துவ பள்ளியை நிறுவினார். உடல் நலிவுற்ற போதும் தகுந்த ஒய்வு எடுத்துக் கொள்ளாது செவிலியப்பணி மேம்பாடு அடைய அயராது உழைத்தார். செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் செவிலியருக்கு முதல் பயிற்சிப்பள்ளியை ஆரம்பித்ததோடு மட்டுமின்றி கிரிமியன் போரில் சேவை புரிந்ததற்காக ஆங்கிலேய மக்களால் அளிக்கப்பட்ட பெரும் செல்வத்தை செவிலியப் பயிற்சிப் பள்ளியின் வளர்ச்சிக்கென செலவழித்தார். அவர் இந்தியாவிலுள்ள இராணுவத்தின் நிலைமையை சீர்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். அவர் ஒரு முழுமையான பொது சுகாதாரப்பணிக்கு திட்டமிட்டு அது எல்லா மருத்துவமனைகளிலும் செவிலியத்துறையிலும் கடைபிடிக்க வழிசெய்தார்.

1910ஆம் ஆண்டு மே மாதம் 13ம் நாள் அவரது தொண்ணூறாவது அகவையில் ஆழ்ந்த உறக்கத்தினூடே அவரது உயிர் அமைதியாக பிரிந்தது. மனித இனத்திற்கு அவர் ஆற்றிய பெரும் தொண்டைப் பாராட்டி, 1907ஆம் ஆண்டு அவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. அத்தகைய உயரிய சிறப்பு விருதை வாங்கிய முதல் பெண்மணி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரேயாவார். செவிலியல் மற்றும் செவிலியரின் கோட்பாடு செவிலியல் ஒரு தனிமனிதன் அல்லது சமூகத்தின் நலவாழ்வு தேவைகளை அங்கீகரிக்கக்கூடிய , புரிந்துகொள்ள கூடிய மற்றும் நிறைவேற்றக்கூடிய செய்முறையே செவிலியல் எனப்படும். செவிலியல் உடலில் நடைபெறும் மாறா அறிவியல் நிகழ்வுகளைத் பொறுத்த அமைந்துள்ளது.

செவிலியருக்குரிய பண்புகள்

தனிமனிதனின் தேவைகளை அறிந்து தன்னுடைய திறமையின் மூலம் சேவை செய்பவரும், தான் செய்யும் தொழிலை பெருமையாகவும், அதன் தன் அறிவை வளர்த்து கொள்ளக் கூடியவளாகவும், தன்னுடைய வேலையில் ஒழுக்கமுடனும், கலை உணர்வுடனும் செவிலியப் பணியை செய்பவளாவாள். செவிலிய பணியில் வெற்றி பெற செவிலியர்கள் அன்பு, இரக்கம், மென்மை, பொறுமை மற்றும் புரிந்து கொள்ளும் தன்மை உடையவராக இருக்க வேண்டும். இந்த குணநலன்கள் நோயுற்றோருக்கும், ஊனமுற்றோருக்கும் சேவை செய்ய உதவி செய்கிறது.

விருப்பமும், தியாக மனப்பான்மையும்

இந்த இரு குணங்களும் ஒன்றுக்கு ஒன்று ஈடு செய்பவை. எந்த ஒரு சூழ்நிலையிலும் சேவை செய்ய வேண்டும் என்று உழைக்கும் போது ஒரு செவிலியர் தனது நேரம், சுகம், மற்ற பயன்களை இழக்க நேரிடலாம்.

தன்னடக்கம்

உண்மையான நோக்கமும் ஒழுக்க முறைகளை மட்டும் கடைபிடிப்பதல்ல. நல்ல ஒரு தன்னடக்கம் என்பது என்ன என்பதை அறிந்து அதன்படி நடக்ககூடியவளாவாள்.

அரவணைப்பு

அரவணைக்கும் தன்மை உள்ளத்தில் தூய்மையான அன்பை வெளிப்படுத்த கூடியது. இந்த அன்பு எந்த நாடாகயிருந்தாலும், மொழியாகயிருந்தாலும் உலகில் எங்கு சென்றாலும், நோயாளிக்கு காட்ட வேண்டிய அன்பை காட்டுவதாகும்.

துணிவு

குழப்ப காலங்களிலோ, பிரச்சினைகளின் போதேமா செவிலியர் பொறுமையுடன் கையாள வேண்டும். எந்த ஒரு காரயீயங்களையும் எதிர் கொள்ளும் தைரயீயம் உடையவர் இருக்க வேண்டும்.

ஆலோசனை சொல்பவர்

நோயாளியிடம் காரியங்கள் செய்யச் சொல்லி வற்புறுத்தாமல், செய்ய வேண்டியதை விளக்கி கூறி தானாகவே முடிவெடுக்கச் செய்தல்.

ஆசிரியர்

முறையான, முறைசாரா ஆகியவற்றை கற்பித்தலும், உற்சாகப்படுத்துதலும், எதிர்பாராமல் நடப்பவற்றை விளக்கம் கூறி கற்பிப்பவராவார்.

நோயாளிக்கு பரிந்து பேசுபவர்

நோயாளிக்காக, நோயாளியுடைய இலக்கை அடைவதற்கு பரிந்து பேசுபவர்.

பொறுப்பும், வழிகாட்டுபவரும்

நோயாளியின் திறமையான வழிகாட்டுபவராகவும், நோயாளியின் நிலையை ஊடுருவிச்சென்று அவருடைய உடல்நலம், அறிவு திறன், பொருளாதார நிலை, சமூகசூழ்நிலைக்கு ஏற்றவாறு பொறுப்புடன் வழிகாட்டுபவராகயிருக்க வேண்டும்.

செவிலியரின் அடிப்படைக் கொள்கைகள்

செவிலியர் சீருடை அணியும் பெருமை பெற்ற ஒவ்வொருவரும் நடந்து கொள்வதைப் போன்று சீருடையை மதித்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். (நோயாளியின் படுக்கை மேல் அமராதே)

மேல் பதவியிலிருப்பவர்களுக்கு அவர்களது அனுபவத்திற்கு அறிவுக்காகவும் மதிப்பளிக்க வேண்டும்.

நோயாளி தன்னிடத்தில் கூறப்பட்ட எந்த தனிப்பட்ட செய்தியை சொல்லுவதற்குரிய தகுந்த நபரை தவிர மற்ற யாரிடமும் கூறக்கூடாது.

எப்போதும் சுத்தமான ஆடைகளையே அணிய வேண்டும்.

நோயாளியின் வசதிக்காக மருத்துவமனையின் சரியான இயக்கத்திற்கும் குறித்த காலத்திற்கு பணிக்கு வருவது அவசியம்.

நோயாளிகளும், உடன் செவிலிகளுக்கும் மருத்துவமனையில் பணிபுரியும் அனைவருக்கும் நம்பிக்கையுரியவளாகவும், ஒத்துழைப்புடன் பணிபுரிபவளாகவும் இருக்க வேண்டும்.

மருந்து சரியான முறையில் உபயோகிக்க அலமாரிகள் பத்திரமாக பூட்டப்பட்டு இருக்க வேண்டும்.

நோயாளிகளைப் பற்றியும், மருத்துவமனையின் மற்ற எந்த செய்தியைப் பற்றியும் பொது இடத்தில் உரையாடக்கூடாது.

நோயாளியின் மதத்தை மதித்து ஆன்மாவுக்குரிய தேவைகளை செய்ய வேண்டும்.

ஒரு போதும் நோயாளிகளிடமிருந்து பரிசுப் பொருட்களைப் பெற்று கொள்ளக்கூடாது. செவிலியரின் ஒழுக்க நெறிகள் என்பது செவிலியருக்கேற்ற பண்புகள் நடத்தைகள், யாருடன் எவ்விதமாக பழக வேண்டும் எனவும், ஆசிரியர்கள் செவிலியருக்கு என்ன கற்றுத்தர

வேண்டும் என விளக்கி கூறுவதாகும். செவிலியருக்கான ஒழுக்க நெறிகள் ஆக்ஸ்போர்டு அகராதி “ஒழுக்க நெறி என்பது மனிதனின் கடமைகள்” என்று கூறுகிறது. சேம்பர்ஸ் அகராதி “ஒழுக்க நெறி என்பது மனிதனின் பண்பையும், நடத்தையையும் விளக்குகிற தத்துவமாகும்” என்று கூறுகிறது.

நடத்தை விதிகள்

வெப்ஸ்டர் அகராதி "ஒழுக்க நெறி என்பது மனிதனின் நடத்தையில் நல்லவை எவை தீயவை எவை” என்று கூறுகிறது. ஒரு பணிக்கு நடத்தை விதிகள் அல்லது ஒழுக்க நெறி என்பது மிகவும் அவசியமானதாகும். நடத்தை விதிகளின்படி தீய நடவடிக்கைகளை தவிர்த்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும். மேலும் சக ஊழியர்களிடமும், நோயாளிகளுடனும் நம் உறவுகளை மேம்படுத்திக்கொள்ள முடிவதோடு, இந்த சமூகமானது அந்தந்தப் பணியில் பணி புரிவோர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிந்து கொள்ள உதவுகிறது. ஒரு செவிலியர் குழுவானது “ஒழுக்க நெறி என்பது தெளிந்த அறிவுடன் கூடிய நடத்தையாகும். அந்த தெறிந்த அறிவுடன் கூடிய நடத்தையானது ஒரு மனிதன் தன்னை அறிவதற்கும், மற்றவர்களுடனும் இந்த சமூகத்தோடும் எவ்வாறு பழக வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது” என்று கூறியுள்ளது.

ஒழுக்கநெறி என்பது ஒவ்வொருவரும் தன்னுடைய தினசரி வாழ்க்கையில் எத்தகைய பண்புடன், எந்த கடமைகளுக்காக எவ்விதமாக மற்றவர்களுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கும் எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத கொள்கைகளாகவும். செவிலியரின் ஒழுக்க நெறிகள் என்பது செவிலியருக்கேற்ற உயரிய நடத்தை விதிகளாகும். இது செவிலியரின் நடத்தையை சீராக்கவும், நோயாளிகள் அவரது உறவினர்கள், சக பணியாளர்கள் மற்றும் இந்த சமூகத்தோடு அவர்கள் எவ்வாறு பழக வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. செவிலியருக்கான ஒழுக்க நெறிகள் 1953 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 10 ஆம் நாள் பிரேஸிலுள்ள சாஒ பவுலோ என்னுமிடத்தில் சர்வ தேச செவிலியர் குழுமத்தால் ஏற்படுத்தப்பட்டு மீண்டும் 1964ல் திருத்தம் செய்யப்பட்டது.

நடத்தை விதிகள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.

செவிலியர்கள் நோயாளிகளுக்கு சமூக பொருளாதார தனி நபர் பேதமின்றியும், நோய்த்தன்மையை மனதில் கொள்ளாமலும், ஒரு மனிதனுக்குரிய மரியாதையோடு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

செவிலியரின் அடிப்படை கடமைகள் என்பவை மக்களின் உயிரைக் காப்பது அவர்களின் வேதனைகளை குறைப்பது அல்லது நீக்குவது மற்றும் அவர்களின் உடல் நலம் முன்னேற்றமடைய உதவுவது ஆகியவையாகும்.

செவிலியர்கள் எப்போதும் மேம்பட்ட செவிலியப் பணியை அளிக்க வேண்டும். அது போல் நன்னடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

செவிலியர்கள் வெறும் பயிற்சி மட்டு மின்றி தகுந்த அறிவும், திறமையும் கொண்டு பணிபுரிய வேண்டும்.

நோயாளியின் மத நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும்.

செவிலியரின் கவனித்திற்கு கொண்டு வரப்பட்ட தனிப்பட்ட நபர்களின் தகவல்களை அவசியமின்றி மற்றவர்களுக்கு வெளியிடக் கூடாது. செவிலியர்கள் தமது கடமைகளை அறிந்திருப்பதுடன் தங்கள் பணியில் தாங்கள் செய்யக் கூடாத செயல்களையும் தாங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும் அவசர காலங்கள் தவிர மற்ற நேரங்களில் மருத்துவரின் அனுமதியின்றி நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைக்க கூடாது. அவ்வாறு அவசர காலங்களில் மருந்துகள் கொடுக்கப்பட்டால் அவற்றை உடனடியாக மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.

செவிலியர்கள் மருத்துவரின் பரிந்துரையின் படி அறிவுடனும் மேன்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்

அதே சமயம் தீய நடத்தைகளில் பங்கெடுக்க அறிவுறுத்தப்பட்டால் மறுக்க வேண்டும்.

செவிலியர்கள் தங்களது செவிலியச் சேவைகளுக்கும் தீர்மானங்களுக்கும் தாங்களே பொறுப்பானவர்கள்

செவிலியர்கள் நோயாளிகள் மற்றும் பொது மக்களின் நலம் அல்லது பாதுகாப்பு மற்றவர்களின் திறமையற்ற சிகிச்சை முறைகளால் பாதிக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும்.

செவிலியர்கள் மருத்துவர்கள் மற்றும் பிற நலப் பணியாளர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக திகழ வேண்டும். அதே சமயம் அவர்கள் நோயாளிக்கு தவறான சிகிச்சை அளிப்பதாக தெரிந்தால் அல்லது நோயாளிகளிடம் தவறாக நடப்பதையோ தகுந்த அதிகாரிகளிடம் வெளிப்படுத்த வேண்டும்.

செவிலியர்கள் மற்ற மருத்துவ குழுவுடன் ஒத்துழைப்பதுடன் மற்றவர்களுடனும், பிற செவிலியர்களுடன் நல்ல தோழமையுடனும் அமைதியான முறையிலும் பழக வேண்டும்.

செவிலியர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக நெறிமுறைகளுடன் வாழ வேண்டும். ஏனென்றால் ஒரு செவிலியரின் தனிபட்ட வாழ்க்கை முறையானது மொத்த செவிலியத் துறையையும் பிரதிபலிக்கிறது.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் செவிலியர்கள் கேட்டுக் கொண்டதின்படி சர்வதேச செவிலியர் குழுமம் செவிலியர்கள் ஒழுக்க நெறிகளில் திருத்தங்கள் கொண்டு வர முடிவு செய்தது. கடைசியாக ஒழுக்க நெறி திருத்தம் சர்வதேச செவிலியர் குழுமத்தால் பரிந்துரைக்கப்பட்ட குழுவினரால் 1973 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நகரில் நடந்த 15 வது கூட்டமைப்பில் திருத்தியமைக்கப்பட்டது. திருத்தியமைக்கப்பட்ட ஒழுக்க நெறியானது முக்கியமாக செவிலியர்கள், ஐந்து நிலைகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்குகிறது.

செவிலியரும் பொது மக்களும்

செவிலியர்கள் செவிலியப்பணி தேவைப் படுவோர்க்கு சேவை செய்ய வேண்டும். தனிப்பட்ட மனிதர்களது நம்பிக்கைகள் மற்றும் சமய நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் அவர்கள் சம்பந்தப்பட்டச் செய்திகளின் இரகசியங்கள் காக்கப்பட வேண்டும். நோயாளிகளின் நலனுக்கு அவசியப்பட்டாலன்றி அவை என்றும் வெளிப்படுத்தப்படக் கூடாது.

செவிலியர்களும் அவர்களது சேவைகளும்

செவிலியர்கள் என்றும் தங்களால் முடிந்த மேம்பட்ட பணியை மக்களுக்கு அளிக்க வேண்டும்

செவியர்களும் சமூகமும்

செவிலியர்கள், நோயாளியின் உடல் நலத்துக்காக பாடுபடும் ஒரு குழுவின் அங்கமாவார் எனவே செவிலியர்கள், சகச் செவிலியர்களுடனும், மற்ற குழு உறுப்பினர்களுடனும் சமூகமாக நோயாளியின் நலன் கருதி பணிபுரிய வேண்டும்.

செவிலியரும் உடன் பணியாட்களும்

செவிலி தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களுடனும், பயிற்சி (கல்லூரி) செவிலியர்களிடமும், மற்ற பயிற்சியாளர்களிடமும், சுகாதார குழுக்களிடம் சமூகமாக நடந்து கொள்ள வேண்டும்.

செவிலியரும் செவிலியப்பணியும்

செவிலியர் நடத்தை விதிகள் ஒரு செவிலியர் எவ்வாறு தலைமை பணிகளோடு நடக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும் மேம்பட்ட செவிலியக் கல்வி மற்றும் செவிலியப் பணி மூலமாகவும் செவிலியப் பொது பணிகளில் பங்கேற்று செவிலியத் துறை உயர் முக்கிய பங்காக வேண்டுமென்றும் கூறுகிறது.

ஆதாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்