ரத்த அழுத்தத்தை விரட்டுவதற்கான வழி

நம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும் போது அது பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது. அந்த வகையில் மிகவும் ஆபத்தானது ரத்த அழுத்தம்.

சாதாரண விடயம் போல தோன்றினாலும் இதை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல் தான் வரும் என்று சொன்னது அந்தக் காலம். இப்போது 25 வயதிலேயே ஹார்ட் அட்டாக் பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தப் பிரச்னை.

ரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும் போது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி மூளைக்கு போகும் ரத்தம் குறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது.

மேலும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே பிரச்னை தான்.

வழக்கமாக மாரடைப்புக்கு பிறகு இதயம் ரத்தத்தை பம்பிங் செய்வது குறையும். அப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இதயம் வீங்கும் பட்சத்திலும் குறைந்த ரத்த அழுத்தம் வரலாம்.

குறைந்த ரத்த அழுத்தத்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படலாம். அட்ரீனல் சுரப்பி எனப்படும் ஹோர்மோன் சுரப்பியில் டியூமர் வரலாம். இதனாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது.

சிறு வயதில் உடலை வருத்தி வேலை செய்யாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சேரும் கொழுப்பு, தவறான உணவு முறை, அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்வதால் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு, மது மற்றும் போதைப் பழக்கங்கள், அதிக உடல் எடை போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன.

ரத்த அழுத்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுடன் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

முதலில் உங்கள் உடல் எடை உயரத்துக்கு ஏற்றது தானா என்பதை சோதித்து சரி செய்யவும். தினமும் சில மணி நேரம் வாக்கிங் அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவும். உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் சேர்க்கவும்.

சாப்பாட்டில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் அதிக உடல் எடையை குறைக்கவும். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது ரத்தக் குழாயை சுருங்க செய்யும். உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை விடவும்.

இதே போல் மிகை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மதுப்பழக்கத்தையும் விட வேண்டும். மதுவை விட முடியாதவர்கள் மதுவின் அளவை படிப்படியாக குறைத்துக் கொள்ளவும்.

ஆதாரம்: தமிழ் முரசு