தேவையான பொருட்கள்

கத்தரிக்காய், வெண்டைக்காய், குடமிளகாய் தலா 100 கிராம், ஃபார்மேஷன் சீஸ் 20 கிராம், மிளகு 10 கிராம், பூண்டு இரண்டு பல், ஆலிவ் ஆயில், துளசி சிறிது, உப்பு சுவைக்கு ஏற்ப.

செய்முறை

குடமிளகாயை துண்டுகளாக நறுக்கி, ஓவன் அல்லது தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் நன்கு சுட வேண்டும்.

பின்னர் அதன் தோலை நீக்கிவிட வேண்டும். பின்னர், இந்த சுட்ட குடமிளகாய், துளசி, ஆலிவ் எண்ணெய், மிளகு, தோல் நீக்கிய பூண்டு, உப்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும்.

இது சாஸ் போன்ற கலவையாக இருக்கும். அடுத்தது, கத்தரிக்காயை மிக மெல்லியதாக வட்ட வடிவில் வெட்டிக்கொள்ள வேண்டும், இதற்கு ஏற்றார்போல வெண்டைக்காயை நீள்வாக்கில் வெட்டி அடுப்புத் தணலில் காட்டி சுட வேண்டும்.

க்ரில் வசதி இருந்தால் அதில் போட்டும் சுட்டுக்கொள்ளலாம். கருகவிடாமல் பதமாக இதை சுட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் வெண்டைக்காய், கத்தரிக்காயை ஒவ்வொரு லேயராக அடுக்கி அதற்கு மேல் சீஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.

இதன் மீது நாம் ஏற்கனவே செய்துவைத்துள்ள சாஸ் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும்.

பலன்கள்

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது வெண்டைக்காய். இதில் வைட்டமின் சி மற்றும் பி அதிகமாக உள்ளது.

இதை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் சிறுநீரைப் பிரித்து, உடல் சூட்டைக் குறைக்கும்.

இதில் உள்ள பெகடின் என்ற நார்ச் சத்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.

இதயத் துடிப்பைச் சீராக்கும் மெக்னீசியம் இதில் உள்ளது. கத்தரிக்காயில் அதிக அளவில் நார்ச் சத்து உள்ளதால், அது குடல் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

உணவு செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் கெட்ட கொழுப்பு மற்றும் சோடியம் மிகக் குறைவாகவே உள்ளது. குடமிளகாயில் வைட்டமின் ஏ, சி மற்றும் பீட்டா கரோட்டின் நிறைவாக உள்ளது.

கொழுப்பு குறைவாக உள்ளது. இதுவும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. சீசில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. மேலும் வைட்டமின் 'டி'யும் இருப்பதால் கால்சியம் உறிஞ்சப்படுவது எளிதாகிறது.